மும்பை,
மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா( ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளின் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இதே போல், ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளில், முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு 'இந்தியா' கூட்டணிக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இரு மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 23-ந்தேதி(நாளை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நிலவரம் மற்றும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஊடகங்கள் மூலம் தொடர்ச்சியாக அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.