விசாகப்பட்டினம்,
ஆந்திராவில் சட்டக்கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சில அந்தரங்க வீடியோக்கள் மூலம் மிரட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஷங்க பிரதா பாக்சி கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் வம்சி மற்றும் அவரது 3 நெருங்கிய நண்பர்கள்தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள்.
பிரதான குற்றவாளியான வம்சி மற்றும் சட்டக்கல்லூரி மாணவியும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்டு மாதம் 13ம் தேதி கிருஷ்ணா நகரில் உள்ள தனது நண்பரின் அறையில் நெருக்கமாக இருந்துள்ளனர். இருவரின் அந்தரங்க தருணங்களை வம்சியின் நண்பர்கள் அவர் உதவியுடன் வீடியோ எடுத்துள்ளனர். காதலனின் உதவியுடன், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அந்த அந்தரங்க வீடியோக்கள் மூலம் மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பல மாத துன்புறுத்தலுக்கு பிறகு, மாணவி நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரது தந்தையால் காப்பாற்றப்பட்டார். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் நால்வரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்" என்றார்.