புதுடெல்லி,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா செயல்பட்டு வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரராக அவர் சாதனை படைத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஒரு வழியாக போராடி இந்திய அணியில் நிலையான இடத்தை பிடித்துள்ளதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.எனவே வருங்கால டி20 தொடர்களில் சுப்மன் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலுடன் அவரை துவக்க வீரராக தொடர்ந்து களமிறக்கலாம் என்றும் தினேஷ் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக தன்னுடைய இடத்தை உறுதி செய்துள்ளார் என்று நினைக்கிறேன். அவரும் ஜெய்ஸ்வாலும் குறைந்தது இன்னும் சில காலம் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக விளையாட வேண்டும். அவர் டி20 கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் தன்னுடைய டெக்னிக்கில் நிறைய மாற்றங்களை செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.