சங்கராபுரம், ஏப். 25: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தில் திருக்கோவிலூர் செல்லும் சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விஜயகுமார் என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வரும் அன்புச்செல்வன் அடிக்கடி மளிகை கடை உரிமையாளர் விஜயகுமாரிடம் பணம் கேட்டு சண்டையிட்டு வந்தாராம். பணம் தர மறுத்ததால் இரு தினங்களுக்கு முன்பு அன்புச்ெசல்வன் மது போதையில் சாலையில் கிடந்த தேங்காயை எடுத்து மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த விஜயகுமாரை தாக்க முற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மளிகை கடை உரிமையாளர் விஜயகுமார், மின்வாரிய ஊழியர் அன்புச்செல்வனின் உறவினர்களிடம் குடித்துவிட்டு அன்புச்செல்வன் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் ரகளையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர் அன்புச்செல்வன் நேற்று பட்டப்பகலில் வீச்சரிவாளுடன் வந்து மளிகை கடை உரிமையாளர் விஜயகுமாரை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து மளிகை கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினாராம். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல் துறையினர் தேவபாண்டலம் பேருந்து நிறுத்தத்தில் வீச்சரிவாளுடன் சுற்றித்திரிந்த மின்வாரிய ஊழியர் அன்புச்செல்வனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டப்பகலில் மின்வாரிய ஊழியர் வீச்சரிவாளுடன் மளிகை கடையை சூறையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post சங்கராபுரம் அருகே பட்டப்பகலில் வீச்சரிவாளுடன் மளிகை கடையை சூறையாடிய மின்வாரிய ஊழியர் appeared first on Dinakaran.