சங்கராபுரம் அருகே துணிகரம் தம்பதியை கட்டிப்போட்டு தாக்கி 200 பவுன் கொள்ளை

1 week ago 3

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தில் வசிப்பவர் கேசவ வர்மன் (47). இவர் குடும்பத்துடன் துபாயில் தங்கி கடந்த 15 ஆண்டுகளாக இன்ஜினீயராக வேலை செய்கிறார். இந்நிலையில் தனது 2வது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதற்காக சில தினங்களுக்கு முன் சொந்த ஊரான கடுவனூர் கிராமத்திற்கு வந்துள்ளார். வரும் ஜூலை 7ம்தேதி மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் குடும்பத்தினரின் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக கேசவ வர்மன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு சென்றுள்ளனர்.

வீட்டில் கேசவ வர்மனின் வயதான பெற்றோர் முனியன்(80), பொன்னம்மாள்(75) ஆகியோர் மட்டும் தனியாக இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட 4 மர்ம நபர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் முகத்தை துண்டு மற்றும் கர்ச்சிப்பால் மூடியநிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் முனியன் மற்றும் பொன்னம்மாள் ஆகியோரை தாக்கி, தனிஅறையில் கட்டிப்போட்டு, கடந்த 1ம்தேதி வங்கி லாக்கரில் இருந்து எடுத்துவந்த நகைகள் எங்கே எனக்கூறி, பீரோ சாவியை கேட்டு மிரட்டியுள்ளனர். சாவியை கொடுக்க மறுக்கவே, தலையணையை எடுத்து 2 பேரின் முகத்தையும் மர்ம நபர்கள் அழுத்தவே, உயிருக்கு பயந்த தம்பதி சாவியை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பீரோவை திறந்து, லாக்கரை உடைத்து 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். உடனடியாக தம்பதியர், மகனுக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். அவரது புகாரின்படி சங்கராபுரம் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மாவட்ட எஸ்பி ரஜட் சதுர்வேதியும் நேரில் விசாரணை மேற்கொண்டார். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.1.50 கோடி ஆகும். தூபாயில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கேசவ வர்மன், கடந்த 1ம்தேதி அங்குள்ள ஒரு தனியார் வங்கியின் லாக்கரில் இருந்த 200 பவுன் நகைகளை எடுத்து வீட்டில் வைத்திருந்தது தெரிந்த நபர்களே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். எனவே சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post சங்கராபுரம் அருகே துணிகரம் தம்பதியை கட்டிப்போட்டு தாக்கி 200 பவுன் கொள்ளை appeared first on Dinakaran.

Read Entire Article