*4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் அருகே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் துணையுடன் போலீசார் மீட்டனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன், ரஞ்சித். விவசாயம் செய்து வரும் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மதியம் அக்கிராமத்தில் உள்ள சுமார் 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறியவாறு தற்கொலை மிரட்டல் விடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது குடும்ப நபர்களின் மீது கரிவலம்வந்தநல்லூர் போலீசார், ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்வதாகக் குற்றம்சாட்டிய இவர்கள், இதன் காரணமாக தங்களது விவசாய தொழில் பாதிக்கப்படுவதோடு மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து இவர்கள் இருவரும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக செல்போன் டவரில் ஏறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு டவர் மீது ஏறிய இவர்கள் இருவரும் டவர் மேலேயே அமர்ந்து மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாகவும்கூறப்படுகிறது. அதனால் அவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இருப்பினும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து, எந்த பாதிப்பும் இன்றி அவர்களை கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.
4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கீழே இறங்கிவந்த இருவரையும் தீயணைப்பு வீரர்கள் துணையுடன் போலீசார் மீட்டனர். இருப்பினும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
The post சங்கரன்கோவில் அருகே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள் appeared first on Dinakaran.