*மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு
கோவை : கோவை சங்கனூர் ஓடையின் கரைப்பகுதியில் இடிந்து விழுந்த 3 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாற்று வீடுகள் வழங்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சங்கனூர் ஓடை, தடாகம் தொடங்கி சிங்காநல்லூர் குளம் வரை நீள்கிறது.
இந்த ஓடையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணி கோவை மாநகராட்சி சார்பில் நடந்து வருகிறது. முதல்கட்டமாக, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை புறக்காவல் நிலையம் அருகே தொடங்கி, சுமார் 2.3 கிமீ தூரத்துக்கு இப்பணி நடக்கிறது.
அதன்படி கோவை டாடாபாத் ஹட்கோ காலனி அண்ணாநகர் பகுதியில் ஓடையை தூர்வாரும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது கரைப்பகுதில் இருந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீட்டின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு வீடு சரிந்து விழுந்தது.
இதைத்தொடர்ந்து அருகில் உள்ள 2 ஓட்டு வீடுகளும் சரிந்து விழுந்தன. ஆனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த வீடுகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் சுல்தானா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், அந்த 3 வீடுகளின் உரிமையாளர்களுக்கும் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
சங்கனூர் ஓடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணி காரணமாக, ஓடையின் கரையோரம் உள்ள வீட்டின் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. இதை ஏற்று அப்பகுதியினர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.
அப்படி சென்றவர்களின் 3 பேர் வீடுகள்தான் தற்போது இடிந்து விழுந்துள்ளது. இவர்களுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் பரிந்துரையின்பேரில் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் சார்பில் தலா 1 வீடுகள் ஒதுக்கப்பட உள்ளது. குறிப்பாக, சித்தாபுதூர், செல்வபுரம் பகுதியில் தற்போது கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும். விண்ணப்பதாரரின் விருப்பத்தை ஏற்று, இந்த 2 பகுதியில், ஏதாவது ஒரு இடத்தில் வீடுகள் ஒதுக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கூறினார்.
இடிந்து விழுந்த 2 மாடி வீட்டை சேர்ந்த சுரேஷ் குடும்பத்தினர் கூறியதாவது: நாங்கள் கடந்த 40 வருடங்களாக இங்குதான் வசித்து வருகிறோம். 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களின் நகைகளை அடகு வைத்து இந்த வீட்டை கட்டினோம்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சங்கனூர் ஓடையை தூர்வாரி, தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. அப்போது ஓடையின் இடதுபுறத்தில் உள்ள குறுக்குபாலம் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டுமாறு தெரிவித்தோம். அங்கு கட்டினால் வீடுகளுக்கு பாதிப்பு இருக்காது எனவும், இந்த இடத்தில் அமைத்தால் வீடுகள் பாதிக்கப்படும் எனவும் கூறினோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
நேற்று முன்தினம் ஊழியர்கள் பணிக்கு வந்தபோது நாங்களே வீட்டின் பின்பகுதியை இடித்து அகற்றி தருகிறோம் எனவும், வீட்டின் தூணை இடிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தோம். அதனை ஏற்காமல் வீட்டின் 3 தூண்களையும் இடித்துவிட்டனர்.
இதனால் எங்களது வீடு விழுவதுபோல ஆடிக் கொண்டிருந்தால், நாங்கள் வெளியே வந்துவிட்டோம். பின்னர் சிறிது நேரத்தில் வீடு சரிந்து ஓடையில் விழுந்தது. வீடு இழந்து தவிக்கும் எங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாற்று இடம் வழங்கி வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சங்கனூர் ஓடையின் கரைப்பகுதியில் இடிந்து விழுந்த 3 வீடுகளின் உரிமையாளருக்கு மாற்று வீடு appeared first on Dinakaran.