எம்பெருமானுக்கு பற்பல ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த ஆயுதங்கள் அடியவர்களைக் காக்கின்ற எம்பெருமானுடைய சக்திகளாக இருக்கின்றன. இந்த ஆயுதங்களில் ஐந்து ஆயுதங்கள் மிக முக்கியமான ஆயுதங்கள். இதன் பெருமையை விஷ்ணு சகஸ்ரநாமத்திலும், வேதாந்த தேசிகர் இயற்றிய பஞ்சாயுத ஸ்தோத்திரம் போன்ற ஸ்தோத்திர நூல்களிலும், ஆழ்வார்களின் அருளிச்செயலிலும் நாம் காணலாம்.பகவான் என்னைக் காக்க வேண்டும் என்று சொல்லுகிற ஒரு சுலோகம் தினசரி நாம் வழிபாட்டிலே சொல்லுகின்றோம். அதிலே அவனுடைய பஞ்ச ஆயுதங்களும் குறிப்பிடப் படுகின்றன.வனமாலி கதி சார்ங்கி சக்ரி சனந்தகி ஸ்ரீ மாந் நாராயணோ விஷ்ணு வாசுதேவோ அபிரக்ஷதுபஞ்ச ஆயுதங்கள் என்னைக் காக்க வேண்டும் என்று இந்தச் சுலோகத்துக்கு பொருளல்ல. பகவான் இந்தப் பஞ்சாயுதங்களோடு இருந்து இந்த உலகத்தை ரட்சிக்க வேண்டும் என்று பொருள்.
இந்த பஞ்ச ஆயுதங்களில் சங்கம், வாள், கதை ஆகிய மூன்றையும் பகவான் அதிகம் உபயோகிப்பதில்லை.ஆனால் கடைசி அவதாரமாகிய கல்கி அவதாரத்தில் பிரதானமான ஆயுதம் வாள் தான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஐந்து ஆயுதங்களில் வில்லும் சக்கரமும் மிகப் பிரதானமான ஆயுதங்களாக பலப்பல போர்களைக் கண்டிருக்கின்றன. பகவான் பெரும்பாலும் இந்த இரண்டு ஆயுதங்களையே உபயோகப்
படுத்துகின்றான்.பகவானுடைய அவதாரங்களில் பூரணமான அவதாரம் இரண்டு.ஒன்று இராம அவதாரம். அதிலே அவன் வில்லும் கையுமாக இருந்தான்.இன்னொன்று கிருஷ்ணாவதாரம். சக்கரமும் கையுமாக இருந்தான்.அதனால் பகவானுக்கு சார்ங்கபாணி என்று ஒரு திருநாமமும், சக்கரபாணி என்ற திருநாமமும் உண்டு.இந்த இரண்டு திருநாமங்களோடு ஒரே தலத்தில் அவருக்கு தனித் தனித் திருக்கோயில் உண்டு. அந்தத் தலம் தான் திருக்குடந்தை. (கும்பகோணம்)திருக்குடந்தையில் ஆராதமுதமாகிய எம்பெருமான் சார்ங்கபாணியாக இருக்கின்றார். இதை எழுதுகின்ற பொழுது சார்ங்கபாணி என்றுதான் எழுதவேண்டும். சாரங்கபாணி என்று எழுதக்கூடாது. சார்ங்கம் என்றால் வில். சாரங்கம் என்றால் மான். சார்ங்கபாணி என்றால் வில்லேந்திய பெருமாள். சாரங்கபாணி என்று எழுதினால் மான் மழு ஏந்திய பரமேஸ்வரனைக் குறிக்கும் என்பதை தெரிந்து கொண்டு நாம் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
சக்கரத்தாழ்வாருக்கு என்று அவருடைய பெயரோடு ஒரு திருக்கோயில் இருக்கிறது என்று சொன்னால், அது குடந்தை சார்ங்கபாணி கோயில் மட்டும் தான். மற்ற பிரசித்தி பெற்ற கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு சந்நதிகள் உண்டு.கோவில் கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் இருந்து வட மேற்கில் 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ளது.ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் குறிப்பாக ஜலந்தராசூரன் என்னும் அசுரனால் மிகவும் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தை பிரம்மா பூஜித்தார். அந்தச் சக்கரத்தின் உடைய ஒளி பலமடங்கு பிரகாசமாக இருந்தது. இத்தலம் சூரியனின் பெயரோடு பாஸ்கர ஷேத்திரமாக விளங்குகின்றது.
இங்கே எம்பெருமானே சக்கரத்தாழ்வாராகக் காட்சி தருகின்றார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார். பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார்.சூரியன், அக்னி, அகிர்புந்த்ய ரிஷி, மார்க்கண்டேயன், பிரம்மா முதலியோர் காட்சி கண்டனர் என்று தல வரலாறு குறிப்பிடுகின்றது. சக்கரத்தாழ்வாரின் அம்சமான திருமழிசை ஆழ்வார் இப்பெருமானை மங்களாசாசனம் செய்து இருக்கின்றார்.அழகான பிராகாரங்களோடு, காவிரியின் தென்கரையில் அமைந்த இத்தலமானது மிகப்பெரிய பிரார்த்தனைத் தலமாக விளங்குகின்றது. இக்கோயிலில் இரண்டு வாசல்கள் உண்டு. உத்தராயண வாசல்(வடக்கு), தட்ஷினாயன வாசல் (தெற்கு). ஆடி முதல் மார்கழி வரை தெற்கு வாசல் வழியாகவும், தை முதல் ஆனி வரை வடக்கு வாசல் வழியாகவும் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் கருட சேவை விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். முதலாம் சரபோஜியின் காலத்தில் (கி.பி.1712 – 1728) இக்கோயில் ஆக்கம் பெற்றுத் திகழ்ந்தது. இக்கோயில் மண்டபத்தில் சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையிலான அவருடைய பித்தளைச் சிற்பம் உள்ளது.எத்தகைய கிரக தோஷங்களையும் இந்த சக்கரத்தாழ்வார் நீக்கி நல்வாழ்வு தருகின்றார்.
இவருடைய அவதாரம் நட்சத்திரம் வைகாசி மாதம் சித்திரை நட்சத்திரம். சித்திரை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை செவ்வாய்.எனவே திருமணத்தடையைக் கொடுக்கக்கூடிய செவ்வாய் கிரக தோஷங்களுக்கு மிகச் சிறந்த பரிகாரத்தலமாக இந்தத் தலம் விளங்குகின்றது.இங்குள்ள தாயார் திருநாமம் அற்புதமானது. விஜயவல்லித் தாயார். சுதர்சனவல்லித் தாயார். வெற்றியைக் கொடுக்கக்கூடிய தாயார். இப்பெருமானுக்குச் செந்நிற மலர்களை நாம் அர்ப்பணிக்கலாம். செவ்வரளி, துளசி, வில்வம், குங்குமம் போன்ற பொருட்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.மற்ற திருத்தலங்களில் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் சக்கரபாணி என்கிற பெயரோடு காட்சி தந்து ஆட்சி செய்கின்ற இத்தலத்தின் பெருமையை வெறும் எழுத்தால் எளிதாகச் சொல்ல முடியாது.
The post சங்கடங்கள் தீர்க்கும் சக்ரபாணி appeared first on Dinakaran.