அனேகமாக நம்மில் பலர் இந்தக் கேள்வியை அடிக்கடி தமக்குள் எழுப்பிக்கொள்வார்கள் அல்லது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். இன்னொரு விதமாகச் சொன்னால், சில நேரத்தில் நமது நண்பர்கள் அல்லது நமது உறவினர்கள் “அது என்னமோ தெரியவில்லை உனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?” என்று கேட்பதும் உண்டு.
பொதுவாகவே மனிதர்களிடம் ஒருவித உளவியல் இருக்கிறது. தன்னைத் தவிர உலகத்தில் உள்ள மற்றவர்கள் எல்லோரும் சுகமாக இருப்பதாகவும் தான் மட்டும் துன்பப்படுவதற்கு என்று பிறப்பு எடுத்ததாகவும் கருதிக்கொள்வார்கள்.
ஒரு வேடிக்கையான கதை உண்டு. கஷ்டப்பட்ட ஒருவன் இறைவனிடத்திலே சென்று “எனக்கு மட்டும் ஏன் இத்தனைக் கஷ்டத்தைத் தருகிறாய்? மற்றவர்கள் எல்லாம் சுகமாகத்தான் இருக்கிறார்கள்” என்று கோபமாகக் கேட்டவுடன், அவன் மீது இரக்கப்பட்ட இறைவன், ‘‘அப்படியா நீ சொல்கிறாய்? சரி, நான் உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். இன்று பலரும் கோயிலுக்கு வருவார்கள். ஒவ்வொருவர் கஷ்டத்தையும் நான் உனக்கு உள்ளபடி தெரிவிக்கிறேன். நீ உன்னுடைய கஷ்டத்தை அவர்கள் கஷ்டத்தோடு மாற்றிக்கொள்ளலாம். உன்னுடைய கஷ்டம் அவர்களுக்கு போய்விடும் அவர்களுடைய கஷ்டம் உனக்கு வந்துவிடும்”
“இதில் எனக்கு என்ன ஆதாயம்?” என்று அவன் கேட்டான். இறைவன் சொன்னார்.
“நீதானே சொன்னாய், உன்னைவிட அதிகமாக கஷ்டப்படக் கூடியவர்கள் உலகத்தில் யாரும் இல்லை, உனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கிறது கஷ்டம் வருகிறது என்று, தினம் தினம் நீதானே என் முன்னால் புலம்புகிறாய். எனவே உன்னுடைய கஷ்டத்தை நீ மற்றவர்களுக்கு தந்துவிட்டு அவர்கள் கஷ்டத்தை நீ எடுத்துக் கொண்டால் உன்னைப் பொறுத்தவரை அது குறைவான கஷ்டமாகத்தான் இருக்கும்.
50 கிலோ சுமந்தவனுக்கு அதைவிட குறைவான எடையை சுமப்பது எளிதாகத்தான் இருக்கும்”
சரி, இந்த அளவுக்காவது இறைவன் நம்மீது இரக்கப்பட்டார் என்று அவனும் ஏற்றுக் கொண்டான்.
அன்று மாலை ஒவ்வொருவராக கோயிலுக்கு வந்தார்கள்.
இறைவன் “இதோ வருகின்றாரே இவரைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? இவரோடு உன்னுடைய கஷ்டத்தை நீ மாற்றிக்கொள்கிறாயா?” என்று கேட்டவுடன், மகிழ்ச்சியோடு சம்மதித்தான்.
உடனே கடவுள், ‘‘பொறுமையாக இரு, உன்னைப் பொறுத்தவரை அவன் உன்னைவிட குறைந்த கஷ்டத்தில் இருப்பதாக நினைக்கிறாய். நான் அவன் படுகின்ற கஷ்டத்தைச் சொல்லுகின்றேன் அதற்குப் பிறகும் நீ அவன் கஷ்டத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தால் தாராளமாகச் செய்யலாம்”
அதுவும் நல்ல யோசனையாக பட்டது. சரி அவன் கஷ்டம் என்ன என்று கேட்போம் என்று இறைவன் முகத்தைப் பார்த்தான். இறைவன் அவனுக்கு இருக்கக்கூடிய துன்பங்களை எல்லாம் பெரிய பட்டியலாகக் கொடுத்தார்.
உண்மையில் இவன் பயந்து விட்டான். “பரவாயில்லையே இவன் ஏதோ சுகமாக இருப்பதாக அல்லவா நினைத்தோம். உள்ளுக்குள் இத்தனை கஷ்டமா? பாவம் வெளியில் சொல்லாமல் மறைத்து வாழ்கிறார்” என்று இரக்கப்பட்டான்..
சரி வேறு சிலரைப் பார்ப்போம் என்று கடவுளிடம் சொன்னவுடன், சரி என்று அடுத்தடுத்து வந்த பலருடைய கஷ்டங்களை பட்டியல் போட்டு “உனக்கு பரவாயில்லையா, மாற்றிக்கொள்கிறாயா?” என்று கேட்டவுடன் வேண்டாம்…
வேண்டாம்… என்று மறுத்துவிட்டான்.
கோயில் நடை சாற்றும் நேரம் வந்து விட்டது. கடவுள் இப்பொழுது கேட்டார் “இங்கு வந்த பலரைப் பற்றியும் நான் சொல்லி விட்டேன். இப்பொழுதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. அர்ச்சகர் அர்த்தஜாம பூஜைப் பொருள்களை எடுத்து வரச் சென்றிருக்கிறார். அதற்குள் யோசித்து வை. வந்தவர்களில் யார் கஷ்டத்தை நீ மாற்றிக் கொள்கிறாயோ அவர்களிடம் மாற்றிக் கொள்ளலாம்?”
இவனும் யோசித்துப் பார்த்தான். கடைசியில் ஒரு முடிவெடுத்தான்.
இருக்கின்ற கஷ்டங்களிலே தன்னுடைய கஷ்டம்தான் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. மற்றவர்களெல்லாம் மலைமலையாக அனுபவிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தவுடன், இறைவனிடம் ‘‘ஏதோ இந்த அளவுக்கு குறைவான கஷ்டங்களை என்னுடைய வினையால் நான் அனுபவிக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான். உண்மையில் ஒவ்வொருவருக்கும் துன்பங்கள் இருக்கத்தான் செய்கிறது.
நான் ஒருமுறை பல்வலி வந்தபோது துடித்துப் போனேன். நான் நினைத்தேன் இருப்பதிலேயே மோசமான வலி பல்வலிதான் போலிருக்கிறது ஒருவருக்கு பல்வலி மட்டும் வரக்கூடாது. வேறு ஏதாவது ஒரு உறுப்பில் வலி வந்தாலும் சமாளித்துவிடலாம் போல இருக்கிறது என்று நினைத்தேன்.
சில நாட்கள் கழித்து கண்களில் வலி வந்தது. வலி என்றால் சாதாரண வலி அல்ல இரவு தூங்க முடியவில்லை கண்களில் ஊசி குத்துவது போல வலி அப்பொழுது, ‘‘பல்வலி பரவாயில்லை போல இருக்கிறது கண்வலிதான் மோசமான வலி” என்று நினைத்தேன்.
அடுத்த சில மாதங்களில் எனக்கு சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று ஏற்பட்டு (Urine Track Infection) அடி வயிறு பயங்கரமாக வலித்தது. நான் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக ஒரு ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அப்பொழுது என்னை விட மோசமான நிலையில் ஒருவர் வந்திருந்தார். அவர் வலி பொறுக்க முடியாமல் ஆஸ்பத்திரி வாசலிலேயே கீழே விழுந்து சுருண்டு கிடந்தார். இதுவரை இருந்த பயங்கரவலி அவர் வலியைப் பார்த்தபோது சிகிச்சை இல்லாமலே குறைவது போல உணர்ந்தேன்.
என்னுடைய நண்பர் ஒருவர் எப்பொழுது பார்த்தாலும் தன்னுடைய வருமானத்தைக் குறித்துப் புலம்பிக்கொண்டே இருந்தார். என்னைப் பார்த்து ‘‘ம்… உனக்கென்ன?” என்று சொல்லுவார்.
ஒருநாள் நிதானமாக அவரிடம் நான் சொன்னேன்.
‘‘இதோ பார் உன்னிடம் என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றன எந்த வருமானம் என்பதை ஒரு பேப்பரில் எழுது நான் என்னுடைய வருமானத்தை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதுகின்றேன் நீ என் சொத்துக்களை எல்லாம் உன் பெயருக்கும் உன் சொத்தை என் பெயருக்கும் மாற்றிக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம் என்றேன்.
அவர் சிரித்தார். அதோடு இந்த விவகாரத்தை பேசுவதை விட்டுவிட்டார்.உண்மை இதுதான்.
எல்லாக் கஷ்டமும் எல்லோருக்கும் வரத்தான் செய்கிறது. ஆனால் நமக்கு மட்டுமே இருப்பதாக நாம் கற்பனையாக நினைப்பதால் அந்தக் கஷ்டம் பெரிதாகத் தெரிகிறது. நீங்கள் இப்படி யோசித்துப் பாருங்கள்.
இப்படி எனக்கு கஷ்டம் வந்திருக்கிறது. இந்த கஷ்டம் எனக்கு என்ன செய்தியை, என்ன அறிவுரையை சொல்வதற்காக வந்திருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள். கஷ்டம் நீங்கும் வழி பிறக்கும். வந்த கஷ்டத்தால் சில நன்மைகளும் கிடைக்கும்.
The post சகுன சாஸ்திரம் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? appeared first on Dinakaran.