தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (27.4.2025) கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 9.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி உட்பட 82.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 132 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 29.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 54 திட்டப்பணிகளை திறந்து வைத்து. 25,024 பயனாளிகளுக்கு 239.41 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், 9.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி உட்பட, பொதுப்பணி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை. பேரூராட்சிகள் துறை. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் 82.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 132 புதிய திட்ட பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் 10.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நாளொன்றுக்கு 2.0 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட தானியங்கி பன்னீர் ஆலை உள்பட பொதுப்பணித்துறை, கோயம்புத்தூர் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பேரூராட்சிகள் துறை, வேளாண்மை துறை ஆகிய துறைகளின் மூலம் மொத்தம் 29.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 54 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 586 பயனாளிகளுக்கு 18.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும், மகளிர் திட்டத்துறையின் கீழ் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2,240 மகளிருக்கு 13.73 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் 533 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 4,910 நபர்களுக்கு நிலவரித் திட்ட பட்டாக்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2,772 நபர்களுக்கு இ பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 700 நபர்களுக்கு இ – பட்டாக்களையும், 690 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகளையும். டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 3,220 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ திட்டத்துறையின் கீழ் 3,418 பயனாளிகளுக்கு தூய்மைப் பணியாளர் நலவாரிய அட்டைகளையும், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 4,162 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் என பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் மொத்தம் 25,024 பயனாளிகளுக்கு 239.41 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைவர் கணபதி ப. ராஜ்குமார், க.ஈஸ்வரசாமி. கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் திருமதி கா. ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயர் ரா. வெற்றி செல்வன், மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர். மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி சங்கேத் பல்வந்த் வாகே , மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா. ஆவின் பொது மேலாளர் டாக்டர்.ஆர்.சண்முகம், தமிழ்நாடு ஹாக்கி சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post கோவையில் ரூ.10 கோடி மதிப்பில் அமையவுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் appeared first on Dinakaran.