கோவையில் யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

3 hours ago 2

சென்னை: கோவை வனப்பகுதியை ஒட்டிய யானைகள் வழித்தடத்தில், சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வழக்குகளை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி, கோவை மதுக்கரை, கரடி மடை உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் கன மீட்டர் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு செங்கற்சூளைகள் உள்ளது போல் தெரிகிறது என்று அறிக்கை அளித்திருந்தார். தமிழக அரசு தரப் பில் தாக்கல் செய்த அறிக்கையில் 2023 முதல் 2024 நவம்பர் வரை சட்ட விரோதமாக மண் எடுத்தவர்களுக்கு ரூ.119 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மண் அள்ளும் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள், தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் முறையாக புலன் விசாரணை நடத்தப்படவில்லை. மண் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா, தோண்டப்பட்ட குழிகளை நிரப்ப,சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர்.

மாவட்ட நீதிபதி மற்றும் அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைகளை பரிசீலித்த நீதிபதிகள், மண் அள்ளப்பட்டது தொடர்பாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் நாகஜோதி, செஷாங்க் சாய் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கிறோம். இந்த சிறப்பு புலனாய்வு குழு, நிலுவை வழக்குகளுடன், பின்னணில் உள்ள சதி குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இந்த பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மண் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தானியங்கி கண்காணிப்பு நடைமுறையை உருவாக்கி, மண் கொள்ளையை கண்காணிக்க வேண்டும். தோண்டப்பட்ட குழிகளை நிரப்புவது உள்ளிட்ட தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அமல்படுத்தியது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

The post கோவையில் யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article