கோவையில் மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகம் தான் காரணம் என்று உறவினர்கள், பெற்றோர்கள் குற்றச்சாட்டு!

2 days ago 2

கோவை: கோவையில் மாணவியின் தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம் என்று உறவினர்களும், பெற்றோர்களும் குற்றச்சாட்டி கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை பீளமேடு அருகே உள்ள கோவை நவ இந்தியா இந்துஸ்தான் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கும் விடுதியும் செயல்படுகிறது. கல்லூரியில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த அனுப்பிரியா(19) என்பவர் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ – மாணவிகளுக்கு மருத்துவமனையின் 4வது கட்டிடத்தில் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. மதியம் அனைவரும் உணவு அருந்தச் சென்றுவிட்டனர். அப்போது மாணவ – மாணவிகள், தங்கள் உடமைகளை பயிற்சி நடந்த வகுப்பறையில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவி வைத்திருந்த பையில் பர்சில் இருந்த பணம் ரூ.1,500 திடீரென மாயமானது. உணவு அருந்தி விட்டு வந்த மாணவி பணம் மாயமானதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து பேராசிரியர்களிடம் கூறியுள்ளார். உடனே இதுகுறித்து பாராமெடிக்கல் கல்லூரி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அனுப்பிரியாவை கல்லூரி முதல்வர் அறையில் வைத்து முதல்வர் மற்றும் பேராசிரியர் விசாரித்துள்ளனர். மாலை 2 மணி முதல் 4.30 மணி வரை விசாரணை நடந்துள்ளது.

இதனால் மனமுடைந்த அனுப்பிரியா கல்லூரியின் 4வது தளத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிகிறது. மாணவி தற்கொலை செய்த தகவல் சக மாணவ – மாணவிகளுக்கு பரவியது. அவர்கள் சம்பவம் நடந்த இடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அனுப்பிரியா உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அனுப்பிரியாவின் தாய் மற்றும் உறவினர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரில், மாணவி தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம் என குற்றச்சாட்டி வருகின்றனர். இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கல்லூரி நிர்வாகம் உரிய பதில் அளிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

The post கோவையில் மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகம் தான் காரணம் என்று உறவினர்கள், பெற்றோர்கள் குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.

Read Entire Article