கோவை,
கோவை மாநகர பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அடிக்கடி வாகன தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உக்கடம் ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்பு காளவாய் பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போதை மாத்திரைகளை விற்கும் கும்பலை சேர்ந்தவர் என்பதும், வெளிமாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி அவற்றை கோவைக்கு கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வாலிபர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலில் உள்ள மதுரை பேரையூரை சேர்ந்த பிரகாஷ், முகமது நவுபல் என்கிற கட்டத்துரை, முஜிப் ரகுமான், ரிஸ்வான் சுகைல், முகமது சபீர், மன்சூர் ரகுமான், சனூப், முஜிபூர் ரகுமான், அனீஸ் ரகுமான், சர்ஜூன் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகள், கஞ்சா, ஊசி, 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 10 பேரும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த மாத்திரைகளை வாங்கும் கல்லூரி மாணவர்கள் அவற்றை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதையை வர வைத்துள்ளனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.