கோவை: கோவையில் உடல்நலக்குறைவால் காலமான அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் உடல் இன்று (டிச.17) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் இறுதியில், கோவை தெற்கு உக்கடம், பொன்விழா நகரில் உள்ள, ரோஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.பாஷா(84) கைது செய்யப்பட்டார். இவர், தடை செய்ப்பட்ட அல்-உம்மா இயக்கத்தின் தலைவராவார். தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், கோவை மத்தியசிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.ஏ.பாஷா அடைக்கப்பட்டிருந்தார்.