கோவையில் 2ம் நாளாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்; அரசியல் ஆதாயத்துக்காக கட்சி தொடங்கினேனா..?விஜய் பரபரப்பு பேச்சு

7 hours ago 2

கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் கோவை குரும்பப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தவெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார். 2வது நாளாக நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் விஜய் பங்கேற்று பேசியதாவது: தவெக வெறும் அரசியல் ஆதாயத்திற்கு தொடங்கிய கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கு இடம் இல்லை. மக்களுக்கு ஒரு நல்லது கிடைக்கிறது என்றால் எந்த ஒரு எல்லைக்கும் சென்று போய் செய்ய நாங்கள் தயங்க மாட்டோம். நமது ஆட்சி அமைந்ததும் ஒரு சுத்தமான அரசாக இருக்கும். நமது அரசில் ஊழல் இருக்காது, ஊழல்வாதிகள் இருக்க மாட்டார்கள். இதனால் எந்த ஒருவிதமான தயக்கம் இல்லாமல் தைரியமாக நமது பூத் ஏஜென்டுகள் மக்களை சந்தியுங்கள்.

நீங்கள் மக்களை சந்திக்கும்போது அறிஞர் அண்ணா சொன்னதை நான் உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களிடம் இருந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய். இதை புரிந்து நீங்கள் செயல்பட்டால் உங்கள் ஊர் சிறுவாணி தண்ணீர்போல அவ்வளவு சுத்தமான ஆட்சியாக அமையும். இன்னும் உறுதியாக சொல்ல வேண்டும் என்றால் நமது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி ஒரு தெளிவான, உண்மையான, வெளிப்படையான ஒரு நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக அமையும். அதனால் நமது சார்பாக மக்களிடம் கொண்டு போய் இதை எடுத்து சொல்லுங்கள். தவெக மற்ற கட்சி போல இல்லை, வெற்றியை அடைவதற்கு உங்களின் செயல்பாடுதான் முக்கியம். நீங்கள்தான் முதுகெலும்பு. இதை மனதில் வைத்து செயல்படுங்கள். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். இவ்வாறு பேசினார்.

விஜய் மீது மர்ம பொருள் வீச்சு
ஓட்டலில் இருந்து கருத்தரங்கம் நடைபெற்ற தனியார் கல்லூரிக்கு வேன் மூலம் விஜய் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த தொண்டர்கள் பூக்கள், கட்சி துண்டுகளை விஜய் மீது வீசினர். திடீரென்று கருப்பு கலரில் இருந்த மர்ம பொருள் ஒன்றை தொண்டர்களில் ஒருவர் விஜய் மீது வீசினார். ஆனால் அந்த மர்ம பொருள் தன் மீது படாமல் இருக்க விஜய் விலகினார். அருகில் நின்றிருந்த பவுன்சர்கள் மீது அந்த மர்ம பொருள் விழுந்தது. இதனால் பரபரப்பு நிலவியது.

2வது நாளாக ரோடு ஷோ
வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு விஜய் சென்றார். விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கிய ஓட்டலுக்கும், அங்கிருந்த விழா நடைபெற்ற தனியார் கல்லூரிக்கும் விஜய் ரோடு ஷோ நடத்தினார். அவருக்கு தவெக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், நேற்றும் ஓட்டலில் இருந்து விழா நடைபெறும் கல்லூரிக்கு விஜய் ரோடு ஷோ நடத்தினார். அவரது வேன் முன்னாலும், பின்னாலும் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் கார் மற்றும் பைக்கில் ஆபத்தான முறையில் பயணித்தனர். நேற்று முன்தினம் வேன் மீது ரசிகர்கள் பாய்ந்ததாலும், வெயிலின் காரணமாகவும் விஜய் சிறிது தூரம் வெளியே வந்தும், சிறிது தூரம் வேனில் அமர்ந்தும் ரசிகர்களை பார்த்து கையசைத்து சென்றார். விஜய் சென்ற காளப்பட்டி சாலை மிகவும் குறுகிய சாலை. இந்த சாலையில் விஜய் ‘ரோடு ஷோ’ சென்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்கு
கோவை விமான நிலையத்தில் விஜய்யை வரவேற்க குவிந்த ரசிகர்கள், அங்கிருந்த டிராலிகள் மற்றும் தடுப்புகளை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்துக்குள் செல்ல முடியாமலும், வெளியே வர முடியாமலும் பயணிகள் அவதிப்பட்டனர். இதுதொடர்பாக காளப்பட்டி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி லட்சுமி பீளமேடு போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், தவெக மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் விஜய்யை வரவேற்க முன் அனுமதி பெறாமல் கூடியதாகவும், இதனால் கோவை விமான நிலையத்திற்கு சென்றவர்கள் சிரமம் அடைந்ததாகவும், கட்சி தொண்டர்கள் வாகனங்களை வேகமாகவும், அலட்சியமாகவும் இயக்கி பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து பீளமேடு போலீசார் மாவட்ட செயலாளர் சம்பத்குமார் மற்றும் கட்சி தொண்டர்கள் மீது அனுமதியின்றி கூட்டம் கூடுதல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை போல் விஜய் தங்கிருந்த ஓட்டலுக்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

The post கோவையில் 2ம் நாளாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்; அரசியல் ஆதாயத்துக்காக கட்சி தொடங்கினேனா..?விஜய் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article