கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன்

1 week ago 3


கோவை: கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்த முதல்வருக்கு பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்தார். கோவை காந்திபுரத்தில் ரூ300 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் நிகழ்ச்சிக்கு பின்னர் முதல்வரை நேரில் சந்தித்து சிரித்தபடி பேசி மனு வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர், வானதி சீனிவாசனின் கோரிக்கைகளை சிறிது நேரம் கேட்டறிந்தார். பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில்தான் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமையவுள்ளது.

நூலகம் என்பது அடுத்த தலைமுறைக்கான திட்டம் மட்டும் இல்லை. பல்வேறு தலைமுறைக்கான திட்டம். இந்த பிரமாண்ட நூலகத்திற்காக மாநில முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அரசு விழா முடிந்த பிறகு முதல்வரிடம் கோவை பகுதி, கோவை சட்டமன்ற தொகுதியின் தேவை குறித்த ஒரு கோரிக்கை மனு அளித்தேன். தமிழக முதல்வர் நிறைய அறிவிப்புகளை கொடுத்து உள்ளார். கோவை வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான திட்டங்கள் தேவை. கோவையில் தலைமை செயலாளர், அமைச்சர்கள் ஆகியோர் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு இருப்பதை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் வரவேற்கிறேன்’ என்றார்.

முதல்வருடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், இன்று (நேற்று) அரசு விழாவிற்காக கோவை வருகை தந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோவை மாவட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகளின் மனுவை வழங்கினேன்.இதில் ஒரு சில கோரிக்கைகளை பற்றி அறிவிப்புகளை இன்று (நேற்று) முதல்வர் வெளியிட்டு இருக்கிறார். அதற்காக கோவை தெற்கு தொகுதி மக்களுடைய சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடர்பாக உள்ள சிக்கல்களை அவரது கவனத்திற்கு கொண்டு வந்தேன். எனது கோரிக்கையை ஏற்று விரைந்து முடிப்பதாக உறுதியளித்தார் என கூறியுள்ளார்.

The post கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் appeared first on Dinakaran.

Read Entire Article