கோவை மாவட்டத்தில் செயல்படும்; சட்டவிரோத செங்கற்சூளைகளை ஆய்வு செய்ய குழு

1 month ago 13

கோவை, செப். 29: கோவை மாவட்டத்தில் செங்கற்சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சுரங்கத்துறை தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட வனப்பகுதிகளில் சீல் வைக்கப்பட்ட செங்கற்சூளைகள் சட்டவிரோதமாக செயல்படுவது தொடர்பாகவும், செம்மண் கொள்ளை தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று சுரங்கத்துறை உதவி இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆலந்துறை, தேவராஜபுரம், வெள்ளிமலைப்பட்டினம், கரடிமடை கிராமங்களில் செம்மண் கொள்ளை தொடர்பாக மாவட்ட கலெக்டர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பி.சொக்கலிங்கம், உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 25ம் தேதி மாவட்ட கலெக்டரும், கனிம வளத்துறை உதவி இயக்குனரும் நேரில் ஆய்வு செய்த பிறகும் செம்மண் கொள்ளை தொடர்ந்து நடைபெறுகிறது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெருமளவில் செம்மண் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்த பிறகும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. உதவி இயக்குனர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், ஒவ்வொரு துறை மீதும் குறை கூறி வருகிறார்கள். சட்டவிரோதமாக 14 செங்கற்சூளைகள் செயல்படும் பகுதிகளிலும், செம்மண் கொள்ளை நடக்கும் பகுதிகளிலும் கோவை மாவட்ட லோக் அதாலத் தலைவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட லோக் அதாலத் தலைவருக்கு தேவையான உதவிகளை மாவட்ட கலெக்டர் செய்துதர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post கோவை மாவட்டத்தில் செயல்படும்; சட்டவிரோத செங்கற்சூளைகளை ஆய்வு செய்ய குழு appeared first on Dinakaran.

Read Entire Article