கோவை: கோவை பீளமேட்டில் பணம் திருடியதாக குற்றம் சாட்டியதால் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி வானதி. இவர்களது ஒரே மகள் அனுபிரியா (19), கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி முதலாமாண்டு மருத்துவ துணை படிப்பு படித்து வந்தார். மேலும் அந்த கல்லூரியின் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுபிரியா தங்கிருந்த அறையில் பணம் திருட்டு போனதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை அனுபிரியா திருடியதாக சக மாணவிகள் புகார் அளித்ததாக தெரிகிறது. கல்லூரி நிர்வாகத்தினரும், அனுபிரியாவிடம் விசாரணை நடத்தினர். இதனால் மனவேதனையடைந்தார். இந்நிலையில், நேற்று மருத்துவமனையில் பயிற்சியில் இருந்த அனுபிரியா, திடீரென மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதை பார்த்ததும் சக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்து கொண்டு கீழே வந்து பார்த்தனர். அனுபிரியா இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவமனை முன் குவிந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post கோவை பீளமேட்டில் மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை: பணம் திருடியதாக குற்றம் சாட்டியதால் விபரீதம் appeared first on Dinakaran.