கோவை கோர்ட்டு ரவுண்டானா பகுதியில் பழுதடைந்த சாலை உடனடியாக சீரமைப்பு

4 hours ago 2

கோவை கோர்ட்டு அருகே உள்ள சாலையில் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். அந்த வழியாக கலெக்டர் அலுவலகம், கமிஷனர் அலுவலகம், ரெயில் நிலையங்களுக்கு வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குனர் அலுவலகம் அருகே சாலை பெயர்ந்து, அதில் பாதிக்கப்பட்ட இரும்புக்கம்பி ஒன்று வெளியே நீட்டியபடி இருந்தது.

இதனால் கலெக்டர் அலுவலகம், உப்பிலிபாளையம் சிக்னல் ஆகிய பகுதிகளில் இருந்து ஹூசூர் சாலை வழியாக அவினாசி சாலை வரும் வாகனங்கள் பழுதாகி வந்தது. அத்துடன் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் தவறி விழும் அபாயம் இருந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக அன்றைய தினம் மாலையிலேயே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Read Entire Article