கோவில்பட்டி,
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. சாலைகளிலும், தாழ்வான இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இளையரசனேந்தல் ரெயில்வே சுரங்கப்பாதையில் ஒரு அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் முன்பு மெயின் ரோட்டில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொடர்ந்து மழை பெய்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.