
திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி, திருவண்ணாமலை கோவில்களில் பக்தர்கள் உயிரிழந்தது தொடர்பாக சட்டசபையில் வானதி சீனிவாசன் (பா.ஜ.க.), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), சிவகுமார் (பா.ம.க.) ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
பழனி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருவண்ணாமலை கோவில்களில் உயிரிழப்பு விபத்தினால் ஏற்படவில்லை, உடல் நலக்குறைவால் ஏற்பட்டுள்ளது. 17 கோவில்களில் மருத்துவமனை உள்ளது. கடந்த கார்த்திகை தீபத்தன்று நானும், அமைச்சர் எ.வ.வேலுவும் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று இருந்தோம். அப்போது தரிசனம் செய்ய வந்த ஒரு நீதிபதி திடீரென மயக்கம் அடைந்து விட்டார். அப்போது அவரது உயிரை காப்பாற்றியது திருவண்ணாமலை கோவில் டாக்டர்கள்தான்.
இதுவரை கோவில்களில் உள்ள 17 மருத்துவமனைகளிலும் 7 லட்சத்து 16 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். சிறப்பான நடவடிக்கையால் கடந்த காலத்தை விட இப்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாகி உள்ளது. இறந்து போன பக்தர்களின் குடும்பத்தினருக்கு ஏதாவது நிதியுதவி செய்யுங்கள் என முதல்-அமைச்சர் கூறினார். அவர்கள் நிதியுதவி கேட்காவிட்டாலும் நாங்கள் நிதியுதவி அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
கடந்த காலங்களில் திருவண்ணாமலை கோவில் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்பது உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நன்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.