
திருப்பதி:
திருப்பதியில் சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது:-
ஆண்டு முழுவதும் பொருளாதார செயல்பாடுகள் நடைபெறும் பகுதி கோவில்கள். இந்தியாவின் கோவில் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடி ஆகும். மற்ற எந்த பொருளாதார செயல்பாடுகளுடன் ஒப்பிட்டாலும் கோவில் பொருளாதாரம் என்பது நாட்டின் மிகப்பெரியது என என்னால் கூற முடியும்.
கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தல், வழிபாட்டுடன் தொடர்புடைய நடைமுறைகள், கோவில்களை சுற்றி வளர்ந்து வரும் நகரத்தில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் பல்வேறு செயல்பாடுகள் என 365 நாட்களிலும் இது நடக்கிறது. நாம் அனைவரும் இதில் ஈடுபடுகிறோம். பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக நன்கொடை வழங்குகிறார்கள். அந்த நன்கொடை பணத்தை அவர்களின் விருப்பங்களுக்காக செலவிட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு, நிதி தொழில்நுட்ப தீர்வுகள், நெறிமுறை சார்ந்த நன்கொடைகள், நிலைத்தன்மை, பாதுகாப்பு, கூட்டக் கட்டுப்பாடு மற்றும் நிதி வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை சர்வதேச கோவில்கள் மாநாடு வலியுறுத்துகிறது.
நாட்டின் ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும், இந்து மக்கள் அதிகம் வசிக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு வெங்கடேஸ்வரர் கோவிலை கட்ட வேண்டும் என விரும்புகிறோம்.
ஆந்திர மாநிலம் 27,000 கோவில்களை நிர்வகிக்கிறது. ஆண்டுதோறும் 21 கோடி யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள். இது நாட்டிலேயே அதிகபட்சமாகும்.
இப்போது பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அது ஒருபோதும் கடவுளை மாற்ற முடியாது. தொழில்நுட்பம் ஒரு விஷயம், கடவுள் இன்னொன்று. கடவுளுக்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை. கடவுள் கடவுள்தான். எந்த விஞ்ஞானியும், தொழில்நுட்ப நிபுணரும், அல்லது வேறு யாராக இருந்தாலும் கடவுள் தீர்மானித்த விதியை பின்பற்றியாக வேண்டும். நாம் அனைவரும் கருவிகள், நாம் கடவுளைச் சார்ந்து இருக்க வேண்டும். அதே நேரத்தில், நாம் நமது கடமையைச் செய்ய வேண்டும்.
2047-ம் ஆண்டுக்குள், இந்தியா உலக அளவில் முதல் அல்லது இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும். இந்தியர்கள் மிகவும் செல்வாக்கு மிக்க சமூகமாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.