பள்ளிபாளையம்:வையப்பமலை கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்ற 1625 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் வேனுடன் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே புதுமண்டபத்தூர் பகுதியில் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறை நாமக்கல் எஸ்ஐ ஆறுமுக நயினார், பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளர் முருகேசன், முதல்நிலைக் காவலர்கள் கார்த்தி, வினோத்குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்வதற்காக நிறுத்தினர்.
ஆனால் வாகனம் அங்கு நிற்காமல் சிறிது தூரம் தள்ளி நின்றது. அதில் இருந்த ஓட்டுனர் பவானியை சேர்ந்த பாலச்சந்தர் (37) வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடினார். அவரை விரட்டிப் பிடித்த போலீசார் வாகனத்தை சோதனையிட்டனர். அதில் 65 சாக்கு மூட்டைகளில் 1625 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. வெப்படை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி வையப்பமலையில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதாக பாலச்சந்தர் தெரிவித்தார். இதையடுத்து வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பாலச்சந்தரை கைது செய்து நாமக்கல் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர்.
The post கோழிப்பண்ணைகளுக்கு கடத்த முயன்ற 1625 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் கைது appeared first on Dinakaran.