மூலவரின் திருவுருவம் அத்தி மரத்தினால் வடிக்கப்பட்டிருக்கிறது. பெருமாள் திருவுருவாக ஆன அந்தமரம் இன்று வரை காயாமல், வேர்களும் நிறம் மாறாமல் ஈரத்தன்மையுடன் உள்ளது அற்புதம். குடமலை மன்னன் நிர்மலன் என்பவனின் தொழுநோயை நீக்கிய தலம் இது. அதோடு அவனுக்கு காவிரிக் கரையில் இந்த அத்தி மரத்தில் தன் விஸ்வரூபத்தைக் காட்டினார் பெருமாள். சங்கு, சக்கரம், கதையோடு அபயஹஸ்தமும் கொண்டு, சதுர் புஜனாய் தனக்கு பெருமாள் காட்சி தந்த அற்புதத் திருக்கோலத்தை அந்த அத்திமரத்திலேயே 20 அடி உயரத்தில் வடித்தார் மன்னர். பெருமாளுக்கு துளசி மாலை, பூணூல், திருவாபரணங்களை அணிவித்து வலது திருமார்பில் மகா
லட்சுமியையும் அமைத்தார்கள்.
விண்ணைத் தொடுவது போல் உயரமாக இருந்ததால், இத்தல பெருமாள் வானமுட்டிப் பெருமாள் என வணங்கப்பட்டார். ஸ்ரீதேவி – பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார். நிர்மல மன்னனின் பாவங்கள் அனைத்தும் இத்தல தரிசனத்தால் நீங்கியதால், கோடிஹத்தி (ஒரு கோடி பாவங்களையும் தீர்க்கும்) தலம் என அழைக்கப்பட்டு பின் மறுவி கோழிக்குத்தியானது. உயர்ந்து குடை வடிவில் உள்ள ஆலயக் கருவறை விமானம், சத்ர விமானம் என போற்றப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் பெருமைகளை கருட புராணம் விரிவாகச் சொல்கிறது.
மூலவர், அத்திமரத்தால் ஆனவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. சாம்பிராணி காப்பு மட்டுமே. இப்பெருமாள் வளர்ந்து கொண்டே செல்வதால், அவர் மேலும் வளராமல் இருக்க, தானியம் அளிக்கும் மரக்காலை கிரீடம் போன்று திருமுடியில் சாத்தியுள்ளனர். உற்சவ மூர்த்தியாக வீற்றிருக்கும் யோக நரசிம்மருக்குதான் அபிஷேக ஆராதனைகள் எல்லாம் செய்யப்படுகின்றன.
வானமுட்டிப் பெருமாளை மனமுருக வழிபட்டால் அனைத்து நோய்களும், இதற்கு முன் ஏழேழு ஜென்மங்களில் செய்திருக்கக்கூடிய பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.
இத்தலத்தில் அருளும் அனுமன், சப்தஸ்வர அனுமன் என்று போற்றப்படுகிறார். அவர் திருவுடலில் 7 இடங்களில் தட்டினால் சப்தஸ்வரங்களைக் கேட்கலாம். இத்தல பெருமாளை வழிபட்டால், சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். பெருமாள் அருள் பெற்ற மன்னன், அவர் திருவருளால் பிப்பலாட மகரிஷியாக மாறினார். இந்த பிப்பலாட மகரிஷி, காவிரிக் கரையில் ஒரு மண்டபத்தில் தவம் புரிந்தார்.
இந்த மண்டபத்தின் அருகே ஓடும் காவிரி, பிப்பலாட மகரிஷி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமிக்கு திருவிழாக்காலங்களில், இந்த பிப்பலர் தீர்த்தத்தை எடுத்துச் சென்றுதான் அபிஷேகம் செய்கிறார்கள். பிப்பலாட மகரிஷி, இத்தல பெருமாள் மேல் இயற்றிய ஸ்லோகங்கள் இங்கே வழிபாட்டு நேரங் களில் பாராயணம் செய்யப்படுகின்றன.
விஷ்வக்ஷேனர், ராமானுஜர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோரும் ஆலயத்தில் அருள்கின்றனர். இத்தலத்தை அடைய, நிர்மல மன்னனுக்கு வழிகாட்டிய மார்க்க சகாயேஸ்வரர் ஆலயம், அருகிலேயே மூவலூரில் உள்ளது.
கும்பகோணம் செல்லும் வழியில் மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ள சோழம்பேட்டை அருகே உள்ளது, இத்தலம்.
The post கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் appeared first on Dinakaran.