விழுப்புரம், டிச. 13: சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற விழுப்புரம் அரசு பள்ளியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவியை ஆசிரியர்கள் மேளதாளம் முழங்க வாழ்த்துக் கோஷங்களுடன் நடனமாடி வரவேற்பு அளித்தனர். விழுப்புரம் அருகே சாலை அகரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜரத்தினம். இவரது மனைவி பூங்கொடி. ராஜரத்தினம் மளிகை கடை நடத்தி வருகின்றார். இவர்களது மகள் சுப, விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். காது மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவியான சுப 8 முதல் 17 வயது வரை தொடர்ந்து ஓட்டப்பந்தயத்திற்கு பயிற்சி பெற்று வந்தார். இவர் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு, விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி., பள்ளியில் படித்தபோது மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 4×100 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கப்பதக்கங்ளை அள்ளி குவித்தார்.
அதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு சென்னையில் நடந்த சி.எம். டிராபி தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3ம் இடம் பிடித்தார். இதையடுத்து சுபயின் விடாமுயற்சியால் 2023 அக்டோபர் மாதம் பெங்களூருவில் நடைபெற்ற காது கேளாதோர், வாய்பேச முடியாதவர்களுக்கான இந்திய தடகள அணிக்கான தேர்வு போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 13.77 நொடிகள் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 1.16 நொடியில் கடந்து தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து தமிழ்நாட்டில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த பயிற்சியின் மூலம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் கடந்த 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 10 வது சர்வதேச ஆசிய பசிபிக் காது கேளாதோர் தடகள போட்டியில் பங்கேற்றார்.
இதில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவிக்கு அலங்கார வாகனத்தில் மாணவி சுபயை உட்கார வைத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரகு தலைமையில் ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மேளதாளம் முழங்கியபடி அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பின்போது ஆசிரியர்களும் நடனமாடி ‘சுப வாழ்க’ என்ற வாழ்த்து கோஷங்களை முழங்கினர். அதைத் தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
தமிழகத்தில் கல்வி பொருளாதாரத்தில் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ- மாணவிகள் விளையாட்டில் மாநில, தேசிய அளவிலும் பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக முதலலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு விளையாட்டு துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் வெளிநாடுகளுக்கு சென்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் மல்லர்கம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விழுப்புரம் மாணவர்கள் ஏற்கனவே பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கோலாலம்பூரில் நடந்த சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற மாணவியை நடனமாடி வரவேற்ற ஆசிரியர்கள் appeared first on Dinakaran.