கோர்ட்டிற்கு துப்பாக்கியுடன் வந்த விவகாரம் மாஜி ஊர்க்காவல் படை வீரர் கைது

2 hours ago 3

*குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததால் நடவடிக்கை

ஓசூர் : ஓசூர் நீதிமன்றத்திற்கு துப்பாக்கிகளுடன் வந்த விவகாரத்தில், கொலை குற்றவாளி மற்றும் பாதுகாப்பிற்காக வந்த 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொளதாசபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் கடந்த 18.9.24ம் தேதி இரவு, கர்நாடகம் மாநிலம் சூளக்குண்டா பகுதியைச் சேர்ந்த ரேவந்த்குமார்(26) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

விநாயகர் சதூர்த்தி விழாவில் சிலை வைப்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ரேவண்ணா(எ) ரோகித்குமார் என்பவருடன் ஏற்பட்ட தகராறில், ரேவந்த்குமாரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ரோகித்குமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். பின்னர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர்கள், ஓசூர் நீதிமன்றத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட்டனர்.

கடந்த 9ம் தேதி ரேவண்ணா காரில் நீதிமன்றம் வந்தபோது, அவருடன் பாதுகாப்பிற்காக வந்தவர்கள் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரேவண்ணா மற்றும் அவரது கூட்டாளிகள், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாவலர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ஓசூர் அருகே இனப்பசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்குமார் (35) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ரேவண்ணா உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பாக, அங்குள்ள நடவடிக்கைகளை சம்பத்குமார் கண்காணித்து தெரிவித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர், ஓசூர் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோர்ட்டிற்கு துப்பாக்கியுடன் வந்த விவகாரம் மாஜி ஊர்க்காவல் படை வீரர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article