கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் சாலைமறியல்

1 week ago 3

அரியலூர், நவ.8: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் 80 பேர் கைது செய்யப்பட்டனர். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சரியான எடையில், தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் 100 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பொருள் வழங்கிவிட்டு பொதுமக்களை அலைக்கழிப்பு செய்வதை நிறுத்த வேண்டும். நியாய விலைக் கடைக்கு 90 சதவீதம் பொருள்களை வழங்கிவிட்டு, 100 சதவீதம் வழங்கியதாகக் கூறி அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். இபிஎஸ் செயலி மூலம் ஆய்வு செய்வதை தவிர்க்கப்பட வேண்டும்.

வெளிமாநிலம், வெளியூர் குடும்ப அட்டைகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர், பின்னர் அவ்விடத்திலேயே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட முயன்ற 80 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர். இந்த போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார். செயலர் லெனின் முன்னிலை வகித்தார். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலர் செந்தில்குமார், நகர செயலர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் சாலைமறியல் appeared first on Dinakaran.

Read Entire Article