கோயில் பணத்தில் அறநிலையத்துறை கல்லூரி கட்டுவதற்கு எதிர்ப்பு: எடப்பாடி பேச்சுக்கு கல்வியாளர்கள் கண்டனம்

3 hours ago 1

* பாஜவுடன் கூட்டணி வைத்ததால் கல்வியை அரசியலாக்குவதா என கேள்வி

கோவை: அறநிலையத்துறை கல்லூரி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எடப்பாடிக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பாஜவுடன் கூட்டணி வைத்ததால் கல்வியை அரசியலாக்குவதா என கேள்வி எழுப்பி உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் கோவை வடவள்ளி பகுதி நடந்த பிரசாரத்தில் அவர் பேசுகையில், ‘‘கோயிலை கண்டாலே கண்ணை உறுத்துகிறது. அதில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள்.

கோயில் கட்டுவதற்காக நல்ல உள்ளம் படைத்தவர்கள், தெய்வ பக்தி உள்ளவர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள். அந்த பணம் அறநிலையத் துறைக்கு சேர்கிறது. எதற்காக? அந்த கோயிலை அபிவிருத்தி செய்வதற்காக தான். அந்த பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். ஏன் அரசாங்க பணத்தில் கல்லூரி கட்டினால் வேண்டாம் என்போமா? அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, கலைக்கலூரி உள்ளிட்ட ஏராளமான கல்லூரிகளை அரசாங்க பணத்தில் கொடுத்துள்ளோம்.

வேண்டுமென்றே அறநிலையத்துறை நிதியை எடுத்து செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம்? இதை எல்லாம் சதி செயலாக தான் மக்கள் பார்க்கிறார்கள். கல்வி முக்கியம் தான். அதை அரசாங்க பணத்தில் இருந்தே தர வேண்டும்’’ என்று பேசினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத கோயில்களில் திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடந்து வருகிறது. ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறைக்கு செயல்களுக்கு ஆதீனங்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் அறநிலையத்துறையே கலைக்க வேண்டும் என்று பாஜ எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவர்கள் கொள்கை வழிமொழியும் வகையில் எடப்பாடி பேச்சு அமைந்து உள்ளதாக கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பாஜவுடன் கூட்டணி வைத்த பிறகு அக்கட்சியின் தேசிய தலைமையை மகிழ்விக்கும் வகையில் எடப்பாடி இது போன்ற பேச்சுக்களை பேசி வருவதாகவும், பாஜவுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக பாஜவிலேயே கட்சியை இணைத்துவிட்டது போல அதிமுக கொள்கைகளை மறந்து பேசி வருவதாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோவை புலியகுளம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் வீரமணி கூறியதாவது, ‘‘மகாகவி பாரதியார் ‘அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என கோயில்கள் கட்டுவதை விட ஏழைக்கு கல்வி தருவது முக்கியம் என்று பாடியுள்ளார்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்த்தும் வகையிலேயே, பழைய காலத்தில் நமது நாட்டில் நாளந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு கல்வி தருவது என்பது அரசின் கடமை. அந்த கல்வி செலவுக்கான வருமானம் எதில் இருந்து வருகிறது என்பது முக்கியம் அல்ல. அதை வைத்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்வது ஏற்புடையது அல்ல. படிப்பை அரசியலுக்கு தொடக்கூடாது. கல்விக்கு செலவு செய்வதை கேள்வி கேட்கக்கூடாது.

அதை அரசியலாக்க கூடாது. ஏனெனில் அரசு கல்லூரிகளில் மட்டும் தான் இலவச கல்வியை தர முடியும். அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் 3 ஆண்டுகள் கல்வி பயில, தேர்வு செலவு உள்ளிட்டவற்றுக்கு அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை செலவாகி வந்தது. தற்போது அரசே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை தருவதால், அந்த செலவும் இருப்பதில்லை. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை கண்டிக்கிறோம்’’ இவ்வாறு அவர் கூறினார்.

* எடப்பாடி திறந்தது மட்டும் சரியா? கம்யூனிஸ்ட் கேள்வி
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது பழனியில் இந்து சமய அறநிலையத் துறை நிதியில் இருந்து கட்டப்பட்ட பழனியாண்டவர் தொழிநுட்பக் கல்லூரி நிர்வாக கட்டிடத்தை திறந்து வைத்ததற்கான கல்வெட்டை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, ‘‘பழநி பழநி ஆண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி எல்லாம் கட்டியது யார்? கோயில் பணமா? இல்லை அரசுப் பணமா? தாங்கள் ஆட்சியில் இருந்த போது நீங்களும், உங்களது தலைவர்களும் கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டிடங்கள் கட்டியது சரியா?’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது, ‘‘தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை இருக்கக் கூடாது என பாஜ கூறி வருகிறது. எடப்பாடி பழனிசாமியும் அதனை தான் வலியுறுத்துகிறாரா? அறநிலையத்துறைக்கு எதிரான பாஜவின் கொள்கைக்கு அதிமுக உடன்படுகிறதா? இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதியை பள்ளி, கல்லூரிகளுக்கு பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது?’’ இவ்வாறு அவர் கூறினார்.

* காமராஜர், எம்ஜிஆர் ஆட்சியிலேயே அறநிலையத்துறை கல்லூரிகள் திறப்பு
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மொத்தம் 5 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 1 தொழில்நுட்பக் கல்லூரி, 15 மேல்நிலைப் பள்ளிகள், 8 உயர்நிலைப்பள்ளிகள், 2 நடுநிலைப்பள்ளிகள், 9 தொடக்கப்பள்ளிகள், 1 மெட்ரிகுலேஷன் பள்ளி, 1 ஒன்றிய அரசுத்திட்ட மேல்நிலைபள்ளி, 5 நாதஸ்வரம் மற்றூம் தவில் இசைப்பயிற்சி பள்ளிகள், 2 வேத ஆகமப் பாட சாலைகள், 2 ஓதுவார் பயிற்சிப்பள்ளிகள், 2 தேவாரப் பயிற்சிப் பள்ளிகள், 1 காது கேளாதோர்-பேச இயலாதோர் பள்ளி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்துமே திமுக ஆட்சியில் மட்டுமே கட்டப்பட்டவை அல்ல.

இவற்றில் திண்டுக்கலில் உள்ள பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரி 1963ம் ஆண்டும், பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி 1970ம் ஆண்டும், திருநெல்வேலி ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி 1964ம் ஆண்டும், கன்னியாகுமரி ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி 1963 ஆண்டிலும், நாகப்பட்டினம் பூம்புகார் கல்லூரி 1964ம் ஆண்டிலும் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 4 கல்லூரிகள் காமராஜர் ஆட்சிக் காலத்திலும் மற்றும் 1 கல்லூரி கலைஞர் ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டவை. இதில் பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியானது 1981ம் ஆண்டு அதிமுக நிறுவனத்தலைவர் எம்ஜிஆரால் கட்டப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையில் இந்த கல்லூரிக்கு 8.3.2017 அன்று நிர்வாக அலுவலக கட்டிடத்தை, கோயில் பணத்தில் கல்லூரி கட்ட கூடாது எனக்கூறிய எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, அவரே திறந்துவைத்துள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர், பெண் ஓதுவர்கள் என பல புதிய முயற்சிகளை அறநிலையத்துறை மூலம் திமுக அரசு செய்து வருகிறது. பாஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் மூழ்கிப்போனதால் தான் எடப்பாடி பழனிசாமி இப்படிக்கூறி வருகிறார் என சமூக வலை தளங்களில் இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post கோயில் பணத்தில் அறநிலையத்துறை கல்லூரி கட்டுவதற்கு எதிர்ப்பு: எடப்பாடி பேச்சுக்கு கல்வியாளர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article