கோயில் சார்பில் அமைக்கப்படும் கல்லூரிகள் ஏழை மாணவர்களின் நலனுக்காகத்தான்: ஐகோர்ட் கருத்து

3 months ago 21

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி அமைக்க கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கில் கோயில் சார்பில் நடத்தப்படும் கல்வி நிலையங்கள் ஏழை மாணவர்களுக்காகத்தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பாக கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்காக, கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி, சோமநாத சுவாமி கோயில் பக்தர் எனக்கூறி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், கோயில் நிதியில் கல்லூரிகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பாணை வெளிடப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், குத்தகை ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது, அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும். இந்த அறிவிப்பாணை தொடர்பாக ஆட்சேபம் இருந்தால், அதனை அக்டோபர் 9ம் தேதிக்குள் அறநிலைய துறை ஆணையரிடம் சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ள நிலையில், ஆட்சேபங்கள் தெரிவிப்பதை விடுத்து, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்லூரி துவங்கும் நல்ல நோக்கத்துக்காக கோயில் நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பாணையில் தற்போதைய நிலையில் தலையிட முடியாது.

அதேசமயம், நிலம் குத்தகைக்கு வழங்குவதில் முறைகேடுகள் இருப்பதாக மனுதாரர் கருதினால், தனது ஆட்சேபங்களை அறநிலையத் துறை ஆணையரிடம் சமர்ப்பிக்கலாம். அந்த ஆட்சேபங்களை பரிசீலித்து சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அறநிலைய துறை ஆணையருக்கு உத்தரவிட்டார். விசாரணையின் போது, ஏழை மக்களுக்காக கோயில் சார்பில் அமைக்கப்படும் கல்லூரி ஏழை எளிய மக்களுக்காகத்தான். இந்த விஷயத்தில் மனுதாரர் என்ன நிதி அளித்துள்ளார் என நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.

 

The post கோயில் சார்பில் அமைக்கப்படும் கல்லூரிகள் ஏழை மாணவர்களின் நலனுக்காகத்தான்: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article