சென்னை: ரூ.9,928 கோடியில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை 21.7 கிலோ மீட்டருக்கு ரூ.9,928 கோடியில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான வழித்தடத்துக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரித்த திட்ட அறிக்கையின்படி, இதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கி உள்ளது.
இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் தொடர்பான ஆய்வறிக்கையை மூத்த ஐஏஎஸ் அதிகாரி கே.கோபால் சில தினங்களுக்கு முன் தமிழக அரசிடம் சமர்பித்திருந்தார். இதனடிப்படையில், வடசென்னை மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த மெட்ரோ திட்டத்திற்கு நேற்று தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. சுமார் 21.76 கி.மீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில், 19 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. கோயம்பேடு முதல் பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரை இந்த மெட்ரோ வழித்தடம் அமையவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.9,744 கோடி செலவாகும் எனவும் மதிப்பீடுப்பட்டுள்ளது. இதில் புதிதாக 3 மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்படி, கோயம்பேட்டிலிருந்து தொடங்கும் மெட்ரோ ரயில் வழித்தடம் பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாக சென்று பட்டாபிராம் வெளிவட்டச் சாலையில் முடிவடைகிறது. இந்த திட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஓ.டி., ஆவடி ரயில் நிலையம், பேருந்து முனையம், வெளிவட்டச் சாலை ஆகியவற்றுக்கு தடையின்றி போக்குவரத்து வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post கோயம்பேடு – பட்டாபிராம் வரை ரூ.9,928 கோடியில் மெட்ரே ரயில் நீட்டிப்புக்கு தமிழக அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.