வேலாயுதம்பாளையம், செப்.29: கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை மற்றும் ஏகாதசியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர். முன்னதாக சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுடன் கோயிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து, சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.
அதேபோல், புன்னம் அருகே உள்ள அனுமந்தராய பெருமாள் கோயிலிலும் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை மற்றும் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை மற்றும் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
The post கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.