கோபி அருகே வேலியில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்ற விவசாயி சிறையில் அடைப்பு

2 weeks ago 4

கோபி : கோபி அருகே வேலியில் மின்சாரத்தை பாய்ச்சி காட்டு யானையை கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே டி.என்.பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரி உள்ளது. கல்லூரிக்கு சொந்தமான விளை நிலத்திற்குள் யானை வராமல் இருக்க மின்வேலி அமைத்து உள்ளனர். இந்த மின்வேலியில் சிக்கி கடந்த 12 நாட்களுக்கு முன் மக்னா யானை உயிரிழந்தது. இது தொடர்பாக டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார் (36) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த யானை அடிக்கடி சசிக்குமார் மற்றும் அவரது அண்ணன் பெரியசாமி ஆகியோரது தோட்டத்திற்குள் புகுந்து கரும்பினை சேதப்படுத்தி வந்துள்ளது. கரும்பு தோட்டத்துக்கு செல்லும்போது தனியார் கல்லூரி அமைத்துள்ள மின் வேலியை உடைத்துக் கொண்டு சென்று வந்துள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சசிக்குமார், பெரியசாமி ஆகியோர் சம்பவத்தன்று யானை கரும்பு தோட்டத்திற்குள் வருவதை அறிந்து அவர்களது தோட்டத்தில் இருந்த உயரழுத்த மின்சாரத்தை வயர் மூலம் மின் வேலியில் சட்டவிரோதமாக இணைப்பு கொடுத்து யானையை விரட்டி உள்ளனர். கரும்பு தோட்டம் வழியாக வெளியேற முயன்ற யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து சசிக்குமாரை கைது செய்த வனத்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பெரியசாமியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

The post கோபி அருகே வேலியில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்ற விவசாயி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article