கோத்தகிரி சாலையில் குட்டிகளுடன் நடமாடும் புலி வீடியோ தவறானது

3 months ago 20

 

ஊட்டி, அக்.5: நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட வனங்களில் புலிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இவை அவ்வபோது சாலையை கடக்கும்போது, குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் உலா வரும் போது காண முடியும். இந்நிலையில் ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் தொட்டபெட்டா பகுதியில் குட்டிகளுடன் புலி ஒன்று நடமாடுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டதில், குட்டிகளுடன் உலா வரும் புலியின் வீடியோ நீலகிரியில் பதிவு செய்யப்பட்டதில்லை என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டு வருவதும் தெரியவந்தது. எனவே உண்மைக்கு புறம்பாக வீடியோவை தொட்டபெட்டா சிகரம் அருகே எடுத்த வீடியோ என சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்.

வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் வனத்துறை மூலம் முறையாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படும். மீறி தவறான வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கௌதம் கூறுகையில், குட்டிகளுடன் புலி நடமாடுவது போன்ற வீடியோ தொட்டபெட்டாவில் பதிவு செய்யப்பட்டதாக பரவி வருகிறது. அந்த வீடியோ தொட்டபெட்டாவில் எடுக்கப்பட்டது இல்லை. எனவே வேறு எங்கோ எடுக்கப்பட்ட வீடியோவை தொட்டபெட்டா என பரப்ப வேண்டாம், என்றார்.

The post கோத்தகிரி சாலையில் குட்டிகளுடன் நடமாடும் புலி வீடியோ தவறானது appeared first on Dinakaran.

Read Entire Article