கடந்த சில ஆண்டுகளாகவே புவி வெப்பமடைதல் காரணமாக மழைக் காலங்களில் ஒரு மாதம் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்க்கிறது. மேலும் கோடை காலங்களில் அதிகப்படியான வெப்பம் அதிகரித்து மக்களை திக்குமுக்காட செய்கிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை கோடைகாலம் என்றால் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்கள் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக கத்திரி வெயில் காலத்தில் மட்டுமே அனல் காற்று வீசும். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் பிப்ரவரி மாதம் முடியும் போதே கடும் வெயில் தொடங்கிவிடுகிறது. தற்போது பல மாவட்டங்களில் வெயில் சதம் அடிக்க ஆரம்பித்து விட்டது. இது மேலும் 3 மாதங்களுக்கு அதாவது ஏப்ரல், மே, ஜூன் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை மழை அவ்வப்போது வந்து சில நேரங்களில் மக்களை காப்பாற்றினாலும் அதனை முழுமையாக நம்ப முடியாது என்பதில் மாற்றுக்கருத்து இலலை. அந்த வகையில் தற்போது வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.
இதற்காக, தெருவோரங்களில் உள்ள பழ ரசங்களை அருந்துவது, மோர் குடிப்பது, இந்த சீசனில் கிடைக்கும் தர்பூசணி, கிர்ணிப்பழம் போன்றவற்றை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது ஒருபக்கம் இருந்தாலும் எந்த காலகட்டத்திலும் நம்மவர்கள் மாற்றி யோசிப்பார்கள். அந்த வகையில் ஒவ்வொரு கோடை காலத்திலும் மது வகையான பீர் விற்பனை தமிழகத்தில் சக்கை போடு போடும். பீர் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி. பீர் உடலுக்கு நல்லது. உடல் சூட்டை தணிக்க பீர் உதவி செய்கிறது என நம்மவர்கள் இதற்கு கூறும் காரணங்கள் ஏராளம். ஆனால் இதில் உண்மை உள்ளதா என்று பார்த்தால் அத்தனையும் வடிகட்டிய பொய் என்பதே உண்மை.
அந்த வகையில் ஆண்களுக்கு எப்போதும் மதுபானங்களை குடிப்பதில் ஒரு தனி பிரியம் உள்ளது. தற்பொழுது அது பெண்களிடத்திலும் வந்துவிட்டது என்பதில் மாற்று கருத்து இல்லை. சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட மெட்ரோ சிட்டிகளில் சர்வ சாதாரணமாக பெண்களும் பீர் குடிப்பதை பார்க்கலாம். பீர் என்ற ஒரு போதை பொருள் மக்களோடு ஒன்றிவிட்டது. அதுவும் வெயில் காலங்களில் பீர் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. கூலிங் பீர் இல்லை என்பதற்காக கடைகளில் நடக்கும் தகராறுகளும் அதிகம்.
பீர் என்ற மதுபானத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. உலகில் தண்ணீர், தேநீர் இதற்கு அடுத்தபடியாக அதிகமாக உட்கொள்ளப்படும் திரவங்களில் பீரும் ஒன்று என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. கோதுமை சோளம் அரிசி மற்றும் சில பொருட்களை நன்றாக கொதிக்கலன்களில் கொதிக்க வைத்து நன்கு பதப்படுத்தி இந்த பீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் சுவைக்காக ஒப்பூக்கல் எனப்படும் பூக்களில் இருந்து பீர் வகைகளை தயாரிக்கின்றனர்.
ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ற வகையில் இந்த பீர் வகைகளும் அதன் சுவைகளும் மாறுபடும். பீர் தயாரிக்கும் இடத்தில் எடுக்கப்படும் தண்ணீரின் சுவையைப் பொறுத்து சில இடங்களில் பீர்களின் சுவை மாறுபடுகிறது. அதில் சேர்க்கப்படும் தானியங்கள் மற்றும் மூலப்பொருட்களின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு பிராண்டுகளுக்கும் ஒவ்வொரு வகை சுவை என பல வகைகளில் பீர் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் அதற்கேற்றார் போல் இந்த பீர்களில் ஆல்கஹாலில் அளவும் மாறுபடுகிறது. தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் பீர் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. வெயிலை சமாளிக்க முடியாமல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு சில ஊர்களில் பெண்களும் விரும்பி இந்த பீர்களை குடித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்கள் தற்போது தங்களது ஆதிக்கத்தை கொடி கட்டிப் பறக்க வைத்துள்ளதால் பல்வேறு விதமான கருத்துகளும் அதில் பரிமாறப்படுகின்றன. குறிப்பாக பீர் உடல் உஷ்ணத்தை தணிக்கும், சிறுநீரக கற்கள் வராமல் பாதுகாக்கும், மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் வராது, மன அழுத்தத்தை போக்கும் என இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை ஆதாரத்துடன் அளிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
உண்மையிலேயே பீர் குடித்தால் இது போன்ற நன்மைகள் ஏற்படுமா என்பதை பெரம்பூரை சேர்ந்த சென் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது: வெயில் காலங்களில் அதிகமான அளவு பீர் வகைகளை எடுத்துக் கொள்வதால் அது உடலில் கலந்து வறட்சித் தன்மையை ஏற்படுத்துகிறது. மிகவும் குளிர்ச்சியாக பருகுவதால் தொண்டையில் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் உஷ்ணத்தை தணிக்க பீர் அருந்துகிறோம் என கூறுபவர்கள் அதற்கு மாற்றாக இளநீர், சுத்தமான பதனீர், பழ வகைகளை சாப்பிடலாம்.
மேலும் பீர் வகைகளை எடுத்துக் கொள்ளும்போது அதிகப்படியான சைடிஷ் எனப்படும் பொரித்த உணவுகளை சாப்பிடுகின்றனர். இதன் மூலம் கொழுப்பு புரதச்சத்து அதிகரித்து தொப்பை உடல் பருமன் ஏற்படுகிறது. எதையும் அளவோடு எடுத்துக் கொண்டால் பாதிப்பு கிடையாது. மதுபானங்களோடு ஒப்பிடுகையில் பீரில் ஆல்கஹால் குறைவு என்பதால் அதனை அளவோடு குடித்தால் பெரிய பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளலாம். அளவுக்கு மீறினால் கண்டிப்பாக அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே இயற்கையான குளிர்பானங்கள் காய்கறிகளை இளைஞர்கள் சாப்பிடலாம் கோடைகாலத்தில் உடல் குளிர்ச்சிக்காக சாப்பிடுகிறோம் என பீர் வகைகள் மற்றும் விஸ்கி போன்ற மதுபானங்களை எடுத்துக் கொள்வதால் அது எந்த வகையிலும் அவர்களுக்கு நன்மை பயக்காது என்பதே மருத்துவ ரீதியான உண்மை இவ்வாறு அவர் கூறினார்.
* வேகமான தயாரிப்பு கூடாது
பீர் வகைகளை உற்பத்தி செய்த பின் 12 நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின் வடிகட்டி பாட்டிலில் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும். ஒரு பாட்டிலில் 650 மில்லி என நிரப்பப்பட்டு விற்பனை செய்யப்படும். தற்போது வெயில் காலம் என்பதால் அதிகப்படியான பீர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 12 முதல் 14 நாட்கள் வரை ஊற வைத்தால் தான் பீரின் முழுமையாக சுவை தெரிய வரும். ஆனால் ஒரு சில நிறுவனங்களின் பீர் வகைகள் மட்டும் அதிகப்படியாக விற்பனை செய்யப்படுவதால் அவசர கதியில் இரண்டு மூன்று நாட்களில் தயார் செய்து அதனை விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர்.
இதனால் பீரின் சுவை மாறுபட்டு மதுபிரியர்கள் அதனை விரும்பாமல் ஒரு பிராண்டில் இருந்து மற்றொரு பிராண்டுக்கு மாறுகின்றனர். குறிப்பாக தரமான பீர்களை விரும்பி சாப்பிடும் ஒரு சில மது பிரியர்கள் தற்போது தமிழகத்தில் இருந்து வெளிவரும் பீர்களை சாப்பிடுவது கிடையாது. நமது அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்து வரும் பீர்களையே அதிகம் விரும்புகின்றனர் இதற்கு காரணம் தரம்…
* கூலிங் பீர் கிடைப்பதில் சிக்கல்
பொதுவாக பீர் வகைகளை விரும்பி சாப்பிடும் மது பிரியர்கள் அது கூலிங்காக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். கூலிங் இல்லாத பீர் வகைகளை வாங்க மாட்டார்கள். இது தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு ஒவ்வொரு கோடை கலத்திலும் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. பெரும்பாலும் கடைகளை இரவு மூடிவிட்டு செல்லும் போது பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்தையும் ஆப் செய்துவிட்டு சென்று விடுகின்றனர். அப்படியே ஆன் செய்துவிட்டு சென்றாலும் காலையில் வந்து கடையை திறந்தவுடன் ஒவ்வொரு கஸ்டமரும் வரும்போதும் பிரிட்ஜை திறந்து மூடுகிறார்கள்.
இதனால் பிரிட்ஜில் கூலிங் நிற்பது குறைந்து பீர் வகைகள் கூலிங் இல்லாமல் போகின்றன. இதனால் மதுபிரியர்களுக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் தான் ஏற்பட்டு வருகிறது. சென்னை தாண்டி மற்ற இடங்களுக்கு செல்லும்போது இந்த பிரச்னையை தவிர்க்க டாஸ்மாக் கடைகளோடு ஒட்டிய பார்களில் பீர் வகைகள் விற்கப்படுகின்றன. பெரும்பாலும் அவை ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுகின்றன இதன் மூலம் கூலிங் பீர் கிடைக்கின்றன.
* கூடுதல் பீர்
டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது வெயில் காலம் என்பதால் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் பீர் விற்பனை நடைபெற்று வருகிறது. பீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்டாங் பீர், பிரீமியம் பீர், லேகர் பீர், சூப்பர் ஸ்டாங் பீர் என பல வகையான பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் ஒரு லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில்கள் விற்பனையாகும். ஆனால் இப்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் பெட்டிகள் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. 40 சதவீதம் வரை பீர் விற்பனை அதிகமாகியுள்ளது. இதனால் கூடுதலாக பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன’’ என தெரிவித்தார்.
* கண்டிப்பாக உண்டு பிரச்னைகள்
புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ‘‘மற்ற மதுபானங்களில் அதிக அளவு ஆல்கஹால் உள்ளது என்றும் பீர் வகைகளில் குறைந்த அளவு ஆல்கஹால் உள்ளது என்றும் ஒரு தவறான எண்ணம் இளைஞர்கள் மத்தியில் உள்ளது. இது ஓட்டல் சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிடுவதற்கு சமம். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தயார் செய்யப்பட்ட பீர் வகைகளுக்கும் தற்போது தயார் செய்யப்படும் பீர் வகைகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
அவசர கதியில் சரியான பார்முலாவை பின்பற்றாமல் தற்போது பீர் வகைகளை தயாரிக்கின்றனர். இது உயர் ரத்த அழுத்த நோய்க்கு வழி வகுத்து விடும். மேலும் பீர்களில் உள்ள ரசாயனங்கள் ரத்த குழாய்களில் படிந்து விட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும். எனவே தற்போது நமது ஊர்களில் விற்கப்படும் பீர்களை அதிகமாக எடுத்து கொண்டால் உடல் சார்ந்த பிரச்னைகள் கண்டிப்பாக உண்டு’’ என்றார்.
The post கோடையில் பீர் மோகம் விற்பனை அதிகரிப்பு ;உடலுக்கு நல்லதா: மருத்துவர்கள் விளக்கம் appeared first on Dinakaran.