பெரியபாளையம், ஏப்.23: முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை மற்றும் கோடை விடுமுறை எதிரொலியால் நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
The post கோடை விடுமுறை எதிரொலி சிறுவாபுரி கோயிலில் அலைமோதிய கூட்டம்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.