கோடை காலத்திற்கு ஏற்ற தீவனச்சோளம் சாகுபடி!

6 hours ago 4

கோடைகாலங்களில் கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தின் செலவைக் குறைப்பதற்கு விவசாயிகளே தீவனச் சோளம் பயிரிடலாம். இந்த தீவனப் பயிர்களை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். இதனை இறவைப் பயிராக பயிரிடுவதற்கு ஜனவரி – பிப்ரவரி, ஏப்ரல் – மே மாதங்கள் உகந்தவை. மானாவாரிப் பயிராக ஜூன் – ஜூலை, செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் பயிரிடலாம்.பெரும்பாலும் கோ எஃப், எஸ் 29, கோ 31 (மறுதாம்பு சோளம்) ரகங்கள் பயிரிடுவதற்கு சிறந்தவை. இந்த தீவனச் சோளத்துடன் கோ 5, கோ எஃப் சி 8 ரக தட்டைப்பயறு சேர்த்து ஊடுபயிராகப் பயிரிட்டால் சத்தான தீவனம் கிடைக்கும். அதேபோல் தீவனச் சோளம் கோ 31 ரகத்தை ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிரிடலாம். ஒருமுறை விதைத்து பலமுறை அறுவடையும் செய்யலாம்.

இதனை பயிரிட நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும்போது 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். உழும் முன்பு ஹெக்டேருக்கு 25 டன் தொழுவுரம் இடுதல் அவசியம். ஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதுமானது. 30க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும். விதை உற்பத்தி செய்ய 60க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். அடியுரமாக தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை 45: 40: 40 என்ற விகிதாசாரத்தில் இட வேண்டும். இதனை விதைத்தவுடன் நீர்ப் பாய்ச்சி மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் கொடுத்த பிறகு 7 அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை மண் வகை, மழை அளவைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும் இதனை 50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். முதல் அறுவடையானது விதைத்த 65 முதல் 70 நாளில் மேற்கொள்ளலாம். அடுத்த அறுவடைகளை 50 நாட்களுக்கொரு முறை மேற்கொள்ள வேண்டும். விதைத்த 110 அல்லது 125வது நாளில் அறுவடை செய்யலாம்.

The post கோடை காலத்திற்கு ஏற்ற தீவனச்சோளம் சாகுபடி! appeared first on Dinakaran.

Read Entire Article