பெரம்பூர்: ஒவ்வொரு பருவ காலத்திலும் அதற்கேற்ற உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. குறிப்பாக, மழை காலத்தில் குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்து, சூடான பொருட்களை நாம் சாப்பிடுவது வழக்கம். இதேபோல், கோடை காலத்தில் அதிக அளவில் நீர்ச்சத்து உள்ள பொருட்கள், பழங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். இந்த வெயில் காலத்தில் தாகத்தை தணிக்க பலர், கடைகளில் விற்கப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கி பருகுகின்றனர். ஆனால், இவை உடல் நலத்திற்கு கேடு என்றும், இதற்கு பதிலாக பழரசங்கள் அருந்தலாம், எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதை விட, பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பதற்கு பதிலாக, நேரடியாக பழத்தை அப்படியே சாப்பிடுவது சிறந்தது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி, பலர் கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க பழங்களை சாப்பிடுகின்றனர். அவ்வாறு நாம் கடைகளில் வாங்கி சாப்பிடும் பழங்கள் ஆரோக்கியமானதாக உள்ளதா என்றாலும் கேள்விக்குறி தான். காரணம், இன்று நாம் சாப்பிடும் பெரும்பாலான பழங்கள், இயற்கையாக பழுக்க வைத்து விற்பது கிடையாது.
இன்று குடோனுக்கு வரும் காய்கள், நாளை பழுத்து, நாளை மறுநாள் விற்பனைக்கு சென்று விட வேண்டும் என்ற வணிக நோக்கத்தோடு பல வியாபாரிகள் செயல்படுவதால், பழங்களை ரசாயனங்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இது தெரியாமல், இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த உபாதைகள் உடனடியாக அது நமது உடலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பழங்களை சாப்பிடுவதால் பக்க விளைவு கண்டிப்பாக இருக்கும்.
இதனால், பிற்காலத்தில் நமக்கு ஒரு நோய் வரும்போது எதனால் அந்த நோய் வந்தது என்பதை நம்மால் கணிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் நோயை தீர்க்க மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வேகமாக வாழ்க்கை பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, மனிதர்களின் உயிரைப் பற்றியும், அவர்களது உடல் நலத்தை பற்றியும் கவலைப்படாமல் சிலர் வணிக நோக்கத்தோடு, தங்களது சொந்த வருமானத்திற்காக பலவிதமான கலப்படங்களில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, வாழைப்பழத்தை பழுக்க வைக்க அதில் கெமிக்கல் ஸ்ப்ரே அடிகின்றனர். இதன் மூலம் ஒரு வாரத்தில் பழக்க வேண்டிய வாழைப்பழங்கள் ஒரே நாளில் பழுத்து, உடனடியாக அவற்றை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதேபோல், தற்போது மாம்பழ சீசன் என்பதால் மாம்பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கற்கள் பயன்படுத்தப்பட்டு வந்த காலம் மாறி தற்போது புதுவிதமான ரசாயனங்களை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கின்றனர்.
அதேபோல், ஆப்பிள் வெளியே மெழுகு எனப்படும் வேக்ஸ் பயன்படுத்தி அதனை பளபளப்பாக காட்டுகின்றனர். மேலும் கோடை காலத்தில் மக்கள் விரும்பி சாப்பிடும் ஏழைகளின் பழம் என அழைக்கப்படும் தர்பூசணி பழங்களிலும் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இனிப்புச்சுவை மற்றும் சிவப்பு நிறத்திற்காக இதில் மருந்துகள் செலுத்தி, சிலர் விற்பனை செய்கின்றனர். இதுபோல் யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், தர்பூசணி பழத்தில் எவ்வாறு கெமிக்கல் கலக்கப்படுகிறது என்ற ஒரு வீடியோ உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மூலம் வெளியானது. இதை தவறாக நினைத்துக் கொண்டு தர்பூணி பழம் முழுவதிலும் கெமிக்கல் உள்ளது என நினைத்து தர்பூசணி பழங்களை மக்கள் யாரும் வாங்கவில்லை. இதனால், இந்த வருடம் தமிழகம் முழுவதும் பல நூறு டன் கணக்கில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்பனையின்றி, விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல், ஒரு காலத்தில் தோட்டங்களில் செங்காய் பருவத்தில் உள்ள மாங்காய், வாழையை பறித்து, சந்தைக்கு கொண்டு வந்து பழுத்ததும் விற்பனை செய்து வந்தனர். ஆனால் தற்போது காயாக இருக்கும் போது பறித்து வந்து, குடோனில் சேமித்து வைத்து, அன்றைக்கு எவ்வளவு பழம் தேவையோ அந்தளவுக்கு காய்களை எடுத்து ரசாயனம் தெளித்து பழுக்க வைத்து, விற்பனை செய்கின்றனர். இவற்றை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பல விதமான பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.
இதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தி, செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை பறிமுதல் செய்தாலும், மக்கள் உடல் நலனை பற்றி கவலையின்றி வணிக நோக்கில் பல வியாபாரிகள் இதுபோல் செயல்படுவதால், பொதுமக்கள் எந்தளவு விழிப்புடன் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு தங்களை பாதுகாத்துக் கொண்டால் நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இயற்கையாக ஒரு பழம் பழுப்பதற்கு எத்திலின் வாயு தேவைப்படுகிறது. இது இயற்கையாகவே ஒவ்வொரு பழத்திலும் இருக்கும். சிறிது சிறிதாக பழத்திலிருந்து அது வெளியே வரும் போது பழங்கள் இயற்கையாகவே பழுத்து விடும். ஆனால், வேகமாக பழங்களை பழுக்க வைப்பதற்காக எத்திலின் காஸ் எனப்படும் பொருளை பாக்கெட்டில் அடைத்து அதை பழங்கள் மீது போட்டு விடுகின்றனர்.
இதனால் பழங்கள் சில மணி நேரத்தில் பழுத்து விடுகிறது. ஒவ்வொரு பழத்திற்கும் ஏற்ப எவ்வளவு எத்திலின் காஸ் போட வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதிகப்படியான எத்தலின் காஸ் போட்டு பழங்களை பழுக்க வைக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கால்சியம் கார்பைடு கற்களை பயன்படுத்தியும் மாம்பழங்களை பழுக்க வைக்கின்றனர். இதிலிருந்து சிந்தடிக் காஸ் உற்பத்தியாகும்.
இது போன்ற கற்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்பதால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். அதிகபட்சமாக கேன்சர் வரை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. செயற்கையாக பழங்களை பழுக்க வைப்பதால் வெளியே உள்ள பழங்களின் தோல்கள் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். ஆனால் உள்ளே உள்ள பழம் காய் போன்ற வடிவில் இருக்கும். தக்காளி, பப்பாளி, அவகோடா, கிவி போன்ற பழங்களிலும் சில நேரங்களில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
தற்போது எத்தலின் ரசாயனத்தை ஸ்பிரே வடிவில் கொண்டு வந்து தண்ணீரில் கலந்து வாழைப்பழத்தில் அடிக்கின்றனர். அதுபோன்ற வாழைப்பழங்கள் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். அதில் எந்த விதமான சத்துக்களும் இருக்காது. மாம்பழம் இயற்கையாக பழுக்க ஆரம்பிக்கும் போது அடிப்பகுதியில் இருந்து சிறிது சிறிதாக பழுத்து மேல் பகுதிக்கு வரும். ஆனால் இது போன்ற ரசாயனங்களை வைத்து பழுக்க வைக்கும் போது மாம்பழம் முழுவதும் ஒரே நேரத்தில் மஞ்சல் நிறமாக விடும்.
ரசாயனம் தெளிக்கப்பட்ட பழங்களை எடுத்து நாம் சிறிய அளவில் அழுத்திப் பார்க்கும்போது கல் போன்று இருக்கும். அதை வைத்து கெமிக்கல் கலந்த பழமா என்பதை கண்டுபிடிக்கலாம். அதன் பிறகு பழத்தை நாம் ருசிக்க ஆரம்பிக்கும் போது அதில் ஒரு விதமான புளிப்பு தன்மை இருக்கும். பழத்தின் உண்மையான சுவை அதில் இருக்காது. அதை வைத்தும் கண்டுபிடித்து விடலாம். இப்போது மாம்பழம் சீசன் என்பதால் கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைத்த காலம் மாறி எத்திபேன் எனப்படும் கெமிக்கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைப்பதாக சில புகார்கள் வருகின்றன.
இதை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மீறி அதிகமாக பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு உடல் உபாதை ஏற்படும். எனவே, பொதுமக்கள் முடிந்தவரை இயற்கை முறையில் பழுத்த பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களை பொதுமக்கள் நன்றாக கழுவி சாப்பிட வேண்டும். தோள்களை நீக்கிவிட்டு சாப்பிடுவதும் நல்லது. இல்லையென்றால் பழங்களை காயாக இருக்கும் போதே வாங்கி அதனை வீட்டில் வைத்து பழுக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாது,’’ என்றார்.
* ஏன் இந்த நிலைமை
விவசாயிகள் அல்லது பழங்களை விற்பனை செய்பவர்கள் அதனை வியாபாரிகளிடம் கொடுத்து விடுகின்றனர். வியாபாரிகள் அதனை குடோனின் பழுக்க வைக்க நேரம் இல்லாத காரணத்தினால் மேலும் உடனடியாக பழுக்க வைத்து அதனை விற்பனை செய்து விட்டால், பழங்கள் வீணாவதை தடுக்கலாம் என்ற நோக்கத்தில் பழங்களில் ரசாயனம் கலந்து உடனடியாக பழுக்க வைக்கின்றனர்.
இதனை தடுக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் இவ்வளவு பெரிய சந்தையில் அவர்களது பங்களிப்பு என்பது அனைத்து இடங்களிலும் சென்று சோதனை செய்ய சாத்தியம் இல்லாத காரணத்தினால் வியாபாரிகள் இந்த விஷயத்தில் சுயமாக முன்வந்து திருந்தினால் மட்டுமே இதை தடுக்க முடியும்.
* கைது நடவடிக்கை
செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற விதிமீறல் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று அபராதம் விதித்து, அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகின்றன.
அதன் பிறகு தொடர்ந்து அவர்கள் அதே தவறை செய்தால் குறிப்பிட்ட அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிகபட்சம் அவர்களுக்கு சிறை தண்டனை வரை செல்வதற்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* புதுச்சேரியை சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ‘ரசாயனம் கலந்த பழங்களை சாப்பிடுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக வயிற்றில் புண் வரும். அதை வைத்து பல பிரச்னைகள் நமது உடலில் எழும். அதற்கு நான் சாப்பிட்ட பழத்தில் இருந்த ரசாயனம் தான் காரணம் என்பதை நம்மால் உறுதிப்படுத்த முடியாது. பலருக்கு கிட்னியில் கற்கள் ஏற்படும்.
ஒரு பழத்தை நாம் சாப்பிட்டு அந்த கெமிக்கல் சார்ந்த விஷயங்கள் நமது உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்த 3 மாதம் காலம் கூட ஆகலாம். இதனால் எதனால் பிரச்னை வருகிறது என்பதை நாம் யோசித்து அதற்கேற்ற மருந்துகளை எடுத்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்படும். கெமிக்கல்களை பொருத்தவரையில் எதுபோன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தெரியாது. எனவே முடிந்தவரை பழங்களை வாங்கும் போது அதை நன்கு ஆராய்ந்து நல்ல பழங்களை பொதுமக்கள் தேடி பிடித்து வாங்கி சாப்பிட வேண்டும்.
விஞ்ஞான உலகில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன. அதை நோக்கி மக்கள் வேகமாக ஓடுகின்றனர், ஆனால் உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு இல்லாததால் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கலப்படம் நிறைந்த உணவுகளை பொதுமக்கள் தவிர்க்க தொடங்கினாலே அதனை தயார் செய்பவர்கள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அதனை நிறுத்தி விடுவார்கள். எனவே பொதுமக்கள் உணவு கலப்பட விஷயத்தில் இன்னும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்,’’ என்றார்.
* குடல் சார்ந்த நோய்கள்
பழங்களில் ரசாயனம் கலக்கப்படுவது குறித்து பெரம்பூரைச் சேர்ந்த குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘தற்போது மாம்பழ சீசன் என்பதால் அதிகப்படியான மாம்பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு என்ற கற்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தற்போது ஸ்பிரே வடிவில் நிறைய ரசாயனங்கள் வந்துவிட்டன. இயற்கையாக ஒரு பழம் பழுப்பதற்கும் அதனை செயற்கை முறையில் வேகமாக பழுக்க வைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
செயற்கையாக பழுக்க வைக்கும் போது அதில் உள்ள தன்மைகள் முற்றிலும் மாறி விடுகின்றன. அந்த காலகட்டத்தில் குடோன்களில் வைக்கோல் மூலம் பழுக்க வைப்பார்கள். இதுபோன்ற முறையில் பழங்கள் பழுப்பதற்கு ஒரு வாரம் ஆகும். ஆனால், இப்போது வேகமாக பழுக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கெமிக்கல் போன்ற தவறான செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் பழங்களின் தோள்களில் கெமிக்கல் ஒட்டிக்கொண்டு அதனை உட்கொள்ளும் போது நமக்கு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக வயிற்றுப்போக்கு அதிகமாக வரும் மேலும் குடல் சார்ந்த நோய்கள் அதிகமாக வர வாய்ப்புகள் உள்ளது. பெருங்குடல் சிறுங்குடல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வர வாய்ப்புள்ளது. மேலும் கிட்னியில் கற்கள் சேரும். சிலர் பழத்தை வாங்கி சுடுதண்ணீரில் போட்டு அதன் பிறகு சாப்பிடுவார்கள். இதிலும் பழத்தின் உண்மைத்தன்மை இல்லாமல் போய்விடுகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து கோடைகாலத்தில் ரசாயனம் கலக்காத பழங்களை வாங்கி உட்கொள்ள வேண்டும்,’’ என்றார்.
The post கோடை கால சீசனை பயன்படுத்தி விதிமீறும் வியாபாரிகள் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்களால் உடல் உபாதை ஏற்படும்: மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.