கோடியக்கரை சரணாலயத்தில் குரங்குகளுக்கு உணவு அளித்தால் சிறை தண்டனை

3 months ago 30

சென்னை,

கோடியக்கரை வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதிஷ், நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் ஆகியோரின் உத்தரவின் பேரில், வனச்சரகத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். வேதாரண்யம் வட்டம் கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமான், புள்ளிமான்கள் உள்ளன. மேலும் குரங்குகள், பன்றிகள், குதிரைகள், நரி, முயல்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன.

25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வெப்ப மண்டல வறண்ட பசுமைமாறா காடான இந்த சரணாலயத்தின் எதிர்புறம் பாயிண்ட் காலிமர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த வன உயரின சரணாலயத்தில் 57 வகையான மரங்களும், 154 வகையான மூலிகை செடிகளும் உள்ளன. இங்கு சுதந்திரமாக சுற்றித்திரியும் மான்கள் மற்றும் வனவிலங்குகள் தண்ணீர் அருந்துவதற்கு 57 குளங்கள் உள்ளன. மேலும் 10 நடமாடும் நீர்த்தொட்டிகளும், 17 சிமெண்டு தொட்டிகளும் உள்ளன.

சாலை ஓரத்தில் உள்ள குரங்குகளுக்கு யாரும் உணவளிக்க கூடாது எனவும், மீறி குரங்குகளுக்கு தின்பண்டங்கள், உணவு அளித்தால் வன உயிரின சட்டப்படி 5 முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும். குரங்குகளை இயற்கையோடு ஒன்றிவாழ அனுமதிக்க வேண்டும். எனவே சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக குரங்குகளுக்கு உணவுகள் வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article