* நாகை, காரைக்காலை சேர்ந்த 13 பேர் கைது
* கடலில் குதித்ததில் 2 பேர் படுகாயம்
காரைக்கால்: நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கைது செய்து உள்ளனர். கடலில் குதித்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. கடந்த 25ம் தேதி ஒரே நாளில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்காத நிலையில் நாகப்பட்டினம், காரைக்காலை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்வேல்.
இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே கிராமத்தை சேர்ந்த மாணிக்கவேல் (39), தினேஷ் (30), கார்த்திகேசன் (27), செந்தமிழ் (27), பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன் (22), வெற்றிவேல் (28), மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி சேர்ந்த நவேந்து (34), வானகிரியை சேர்ந்த ராஜேந்திரன் (36), ராம்கி (30), நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த சசிகுமார் (26), நந்தகுமார் (30), பாபு (31), குமரன் (28) ஆகிய 13பேர் கடந்த 26ம்தேதி காலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், இந்தியகடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அச்சமடைந்த செந்தமிழ், பாபு ஆகிய 2 மீனவர்கள் கடலில் குதித்தனர். அப்போது ஒரு மீனவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
துப்பாக்கி முனையில் படகில் இருந்த 11 மீனவர்கள் மற்றும் கடலில் தத்தளித்த 2 மீனவர்களையும் கைது செய்து பறிமுதல் செய்யப்பட்ட படகுடன் யாழ்ப்பாணம் அழைத்து சென்றனர். பின்னர் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 2 மீனவர்கள் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கிராமத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
இலங்கை தூதரை வரவழைத்து இந்தியா கண்டனம்
டெல்லியில் உள்ள இலங்கை தூதருக்கு நேற்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து நேற்றுகாலை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வந்த அவருக்கு ஒன்றிய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதே போல் இலங்கையில் உள்ள இந்திய தூதரகமும் இதுபற்றி இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திடம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அப்போது,’எந்தச் சூழ்நிலையிலும் பலத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்’ என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் போல் சுட்டுப்பிடிப்பதா? பெண்கள் ஆதங்கம்
13 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்ததை தொடர்ந்து 3 மாவட்ட கிராம மீனவபெண்கள் அந்தந்த பகுதிகளில் கூடி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், மீனவர்களையும் படகையும் விடுவிக்குமாறு ஒப்பாரி வைத்ததோடு கண்ணீர் மல்க ஒன்றிய , மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அப்போது மீனவ பெண்கள் கூறுகையில், மீனவர்கள் மீன் பிடிக்க தான் சென்றுள்ளனர். தீவிரவாதிகள் போல் சுட்டு பிடித்தது ஏன்? இதற்கு உரிய தீர்வு காணாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றனர்.
மண்டபம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோவில்வாடி, வடக்கு கடலோர பகுதி மீன்பிடி இறங்கும் தளத்தில் இருந்து, 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக படகில் வந்த இலங்கை கடற்படையினர், இந்த பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் கடலில் விரித்து இருந்த மீன்பிடி வலைகளை சேகரித்துக் கொண்டு அச்சத்தில் கரைக்கு வந்து சேர்ந்தனர்.
The post கோடியக்கரை அருகே நடுக்கடலில் அட்டூழியம்; மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு appeared first on Dinakaran.