கோடிகளில் கல்லா கட்டும் பத்திரப்பதிவு அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 months ago 14

‘‘இலை பார்ட்டியில ஒன்றியத்தை 3 ஆக பிரிச்சா, எனக்கு பதவியே தேவையில்லைன்னு ஒன்றிய செக்ரட்டரி ஒருத்தர் புலம்புகிறாராமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டம் வாசி தொகுதிக்கு உள்பட்ட தெள் ஆறு ஒன்றியம், இலை பார்ட்டியில ஈஸ்ட், வெஸ்ட்டுணு 2 ஒன்றியமாக செயல்படுது.. ரெண்டு ஒன்றியத்துக்கும் செக்ரட்டரிகள் இருக்குறாங்க.. அதேபோல பக்கத்து ஒன்றியமான வாசி ஒன்றியத்துல 3 செக்ரட்டரிகள் இருக்குறாங்களாம்..

இதனால தெள் ஆறு ஒன்றியத்துல இருக்குற யூத் டிஸ்டரிக் செக்ரட்டரி, இலை பார்ட்டி தலைமை நிர்வாகிய சந்திச்சு வாசி ஒன்றியத்தை போல 3 ஆக பிரிச்சு, அதுல தன்னை செக்ரட்டரியாக நியமிக்க வேண்டும்னு பஞ்சாயத்துக்கு போயிருக்குறாரு.. இதை கேள்விப்பட்டு, ஏற்கனவே அங்க நீண்ட காலமாக ஒன்றிய செக்ரட்டரியாக இருக்குறவரு கடும் கோபத்துல இருக்குறாராம்.. ஏற்கனவே ஒன்றியத்தை ரெண்டாக பிரிச்சாங்க, இப்ப 3 ஆக ஒன்றியத்தை பிரிக்கணுமா, எனக்கு இந்த பதவியே தேவையில்லைனு, கூட இருக்குறவங்ககிட்ட சொல்லி புலம்பிக்கிடடு வர்றாராம்.. இந்த புலம்பல் சத்தம் கிரிவலம் வடக்கு மாவட்டம் முழுசுமாக ஒலிக்கத் தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் மாஜி அமைச்சரின் படத்தோடு மின்னிய நோட்டீஸ் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் மாவட்ட கட்சி ஆபீஸ் இருக்கும் தொகுதியின் மாஜியானவருக்கு கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் ரியல் எஸ்டேட், விளையாட்டு என ஓரமாக ஒதுங்கியிருந்தாராம்.. இவர், இலைக்கட்சி தலைவரின் நேரடி தொடர்பில் இருந்ததால் சீட் கிடைக்காமல் பார்த்துக் கொண்டது நிழலானவருன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க..இந்நிலையில் திடீரென அந்த மாஜியானவரின் படத்தோடு நோட்டீஸ் ஊரெல்லாம் மின்னிச்சாம்… இதனால ஷாக்கான அந்த மாஜி, போலீஸ் ஸ்டேசனுக்கு ஓடியிருக்காரு.. என் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் ஒட்டியிருக்காங்க.. உடனடியா அதை கண்டுபிடிங்கன்னு புகாரை தட்டிவிட்டிருக்காரு.. போலீசாரும் உடனடியா களத்தில் இறங்கியதுல சின்னமம்மியோட ஆதரவாளரான மருத்துவர் ஒருவர் சிக்கியிருக்காரு…

விசாரிச்சதுல இன்னும் சுவாரசியமான தகவலும் வெளிவந்துச்சாம்.. தன்னோட உறவினரை அந்த மாஜி கொல்லிமலை மாந்திரீகம் மூலம் அவரு பக்கம் இழுத்துட்டாரு.. இதனால நாங்க சொல்வதை கேட்க மறுக்குறாரு… குடும்பத்துல நிம்மதி இல்லாம போச்சு.. இதற்கு காரணமான மாஜியின் முகத்திரையை கிழித்து வெளியே கொண்டு வரணுமுன்னுதான் நோட்டீசை ஒட்டினேன்னு அவரு சொல்லியிருக்காரு… இதன் பிறகுதான் அந்த மாஜி, மீண்டும் அரசியலுக்கு ஓடிவந்திருக்காரு.. இவரது வருகை தற்போதைய மக்கள் பிரதிநிதிக்கு கடும் நெருக்கடியா போச்சாம். ஏற்கனவே அவர் மா.செ.கனவுல இருக்காராம்.. இதே நிலை நீடித்தால் வரும் தேர்தலில் சீட் கிடைக்காத நிலைகூட ஏற்படும் என கருதினாராம்.. இதனால அந்த மாஜிக்கு மாநில பொறுப்பு கொடுத்து சத்தமில்லாமல் தொகுதியில இருந்து வெளியேத்திட்டதா ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க.. அதே நேரத்துல இந்த மாஜியோ அவரை நம்பி வந்தவங்களை கரையேத்திட்டதாகவும் இதனால அவருக்கு நல்ல பெயர் இருப்பதாகவும் கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

‘‘பத்திரப்பதிவு துறை அதிகாரி கோடிகளில் கல்லாகட்டுறதா பரபரப்பு புகார் வந்திருக்கு போல..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..சென்னை பத்திரப்பதிவு துறையில் துணை பதவியில் பணிபுரிந்து வரும் கடவுளின் பெயரைக் கொண்டவரின் பார்வையில் சென்னை மண்டலத்தில் 42 சார் பதிவகங்களும் கோவை மண்டலத்தில் 56 சார் பதிவகங்களும் உள்ளன. இதில் 35 சார்பதிவகங்களில் தனக்கு சாதகமான உதவியாளர்களை சார்-பதிவாளராக இவர் பணியமர்த்தி வருகிறாராம்.

ஒவ்வொரு உதவியாளரிடம் இருந்து 5 லட்டு வரை பெற்று வருகிறாராம். இதன் மூலம் மட்டுமே இவருக்கு மாதம் 7 சி லஞ்சமாக கிடைக்கிறதாம். மாவட்ட பதிவாளர்களால் மனை மதிப்பு நிர்ணயம் செய்த பின், தன்னை இடைத்தரகர்கள் மூலம் அணுக வைத்து மேல்முறையீடு என்கிற பெயரில் மாவட்ட பதிவாளரால் நிர்ணயிக்கப்பட்ட நிர்ணயத்தை விட ஒரு மனை பிரிவிற்கு ரூ.100 குறைக்க வேண்டி 10 லட்டு வரை பெற்று வருகிறாராம். இதேபோன்று கோவை மற்றும் சென்னை மண்டலங்களில் இவரால் சுமார் 3000த்துக்கும் மேற்பட்ட மதிப்பு நிர்ணயங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள். இதனால் தமிழக அரசுக்கு சுமார் 3000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார் என்கின்றனர் அதிகாரிகள்.

இதே போன்று 47ஏ பதிவுகளுக்கு பரிந்துரை செய்வதற்கு 5 லட்டு முதல் 10 லட்டு வரை பெற்று வருகிறாராம். சென்னை மண்டலத்தில் ரூ.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஆவணங்களை பதிவு செய்வதற்கு அதனை பதிவு செய்யும் சார்பதிவாளர்களை கட்டாயத்தின் பேரில் தன்னை அணுக வைத்து பதிவு செய்யும் ஆவனதாரர்களிடம் இருந்து தனக்கு 3 லட்டில் இருந்து 10 லட்டு வரை லஞ்சமாக பெற்ற பின்னரே பதிவுக்கு ஆவணம் ஏற்கப்படுகிறதாம்.

தற்போது தீபாவளி சிறப்பு நிபந்தனை லஞ்சமாக கோவை, சென்னை மண்டலங்களில் உள்ள சார்பதிவகங்களில் இருந்து தனக்கு 2 சவரன் தங்க காசை அனைத்து சார்பதிவங்களிலும் பெற்று வருகிறார்னு சொல்றாங்க. இப்படி இவர் 98 சார்பதிவகங்களில் இருந்து 2 சவரன் தங்க காசு பெற்று வருகிறாராம். இந்த துணை அதிகாரியின் சொத்து மட்டுமே சுமார் ரூ.300 சி-க்கு மேல் இருக்கும்னு சொல்றாங்க. இந்த தகவல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரிஞ்சும் கண்டும் காணாமல் இருக்கிறார்களாம். ஒருவேளை லஞ்ச ஒழிப்புத்துறை குறைந்த பணம் வாங்கியவர்களை மட்டும்தான் பிடிக்கும்னு பெயர் இருப்பதை நிரூபிக்கிறார்களோனு பேசுறாங்க சார்பதிவாளர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

The post கோடிகளில் கல்லா கட்டும் பத்திரப்பதிவு அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article