கொள்ளிடம் அருகே உப்பனாற்றை கடந்து வயலுக்குள் மீண்டும் புகுந்த கடல் நீர்

4 weeks ago 5

*கதவணை கட்ட வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே கடல் சீற்றத்தால் உப்பனாற்றின் கரையை கடந்து வந்து நிலங்களை கடல் நீர் சூழ்ந்து தேங்கியது. எனவே கதவணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் பிரதான புதுமண்ணியாற்று பாசன வாய்க்காலிலிருந்து கிட்டி அணை உப்பனாறு பிரிந்து சென்று அங்குள்ள நிலப் பகுதிகளிலிருந்து வெளியேறும் அதிகப்படியான நீரை உள்வாங்கி பழையாறு மீன் பிடித்து துறைமுகம் அருகே கடலில் சென்று கொண்டு கலக்கும் முக்கிய வடிகாலாக இருந்து வருகிறது.

கடல் சீற்றம் ஏற்படும் போதெல்லாம் கடல் நீர் இந்த உப்பனாற்றின் வழியே உள்ளே புகுந்து தற்காஸ், புளியந்துறை, மற்றும் தாண்டவன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்களில் புகுந்து தேங்கி விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் வங்க கடலில் ஏற்பட்ட தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு உப்பு நீர் கிட்டிய அணை ஒப்பனாற்றின் வழியே புகுந்து கரையை ஒட்டிய பகுதியில் உள்ள நிலங்கள் மற்றும் குடியிருப்பு அருகே சென்று சூழ்ந்தது.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற ஆரம்பித்தது. ஆனால் தண்ணீர் முழுவதும் வெளியேறாத நிலையில் மீண்டும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதைத் தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக கடல் சீற்றமாக இருந்து வருகிறது. இதனால் மீண்டும் கடல் நீர் உப்பனாற்றின் உள்ளே புகுந்து புளியந்துறை மற்றும் பழைய பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் வந்து சூழ்ந்துள்ளது.

இந்த உப்பனாற்றின் வழியே மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களிலும் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படும் போதும் வேறு சில நாட்களில் கடல் சீற்றம் ஏற்படும் போதும் சாதாரணமாக கடல் நீர் இந்த ஆற்றின் வழியே சென்று நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்து வந்த சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் தொடர்ந்து உப்பு நீர் உள்ளே புகுந்து வருவதால் உப்பு நீர் எப்போதும் தேங்கி இருக்கும் நிலங்களாக அப்பகுதியில் உள்ள நிலங்கள் மாறிவிட்டன.

தொடர்ந்து உப்பு நீர் வந்து தேங்கி பின்னர் வெளியேறி கொண்டிருப்பதால் நிலங்கள் உவர் நிலங்களாகவே மாறிவிட்டன. செழிப்பான விளை நிலங்களாக இருந்து வந்த இந்த நிலங்கள் காலப்போக்கில் படிப்படியாக உவர் நிலங்களாக மாறிவிட்டன. இதனால் அப்பகுதியில் நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலங்களை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர வேண்டுமென்றால், கிட்டியணை உப்பனாற்றின் கரையை உயரப்படுத்தியும், அகலப்படுத்தியும் மேம்படுத்தி உரிய இடங்களில் தண்ணீர் நிலங்களுக்குள் புகாத அளவுக்கு ஆற்றின் கரை பகுதியில் உரிய இடங்களில் குறைந்தது இரண்டு நீர் ஒழுங்கிகளாவது கட்டியும், அப்பகுதியில் உப்பனாற்றின் குறுக்கேயும் உப்பு நீர் உள்ளே புகாதவாறு ஒரு கதவணையும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் அருகே உப்பனாற்றை கடந்து வயலுக்குள் மீண்டும் புகுந்த கடல் நீர் appeared first on Dinakaran.

Read Entire Article