சேலம்: கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார். சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்கான இலச்சினையை வெளியிடும் நிகழ்ச்சி சேலத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மாநாடு இலச்சினையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலத்தில் ஆகஸ்ட் 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேசிய செயலாளர் டி.ராஜா, முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.