சென்னை: “தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் என்பது வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். நீ கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது. எனவே, அண்ணன் தம்பி என்பது வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான்.” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் ஐந்து குண்டுகளைத் தாங்கி மரணித்துக் கிடந்தபோது, பதறித்துடிப்பது தமிழ்த்தேசியம். அதேநேரம், சிறிதும் பதற்றம் இல்லாமல், பதவியேற்கும் திராவிடம். இரண்டும் ஒன்றா? திராவிடம் பெண்ணிய உரிமையைப் பேசும். ஆனால் தமிழ்த்தேசியம், பெண்ணிய உரிமையைக் கொடுக்கும், நிறைவேற்றும் . எனவே, இது இரண்டும் ஒன்று இல்லை. அப்படியிருக்கும்போது, எப்படி விஜய் இரண்டையும் தன்னுடைய கண் என்று கூறுவார்.