கொளுத்தும் கோடை வெயில்: மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

3 weeks ago 9

அம்பை: நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை செல்லும் வழியில் இயற்கை அழகுடன் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் கோடை விடுமுறையில் கொளுத்தும் வெயிலில் கூட்டம் கூட்டமாக குவிந்த சுற்றுலாப் பயணிகள் குதூகலமாக குளித்து மகிழ்ந்தனர். இதனால் அருவிப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெல்லையில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணிமுத்தாறு அணையின் முகப்பு பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் இருந்து வனப்பகுதிக்குள் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள மணிமுத்தாறு அருவி தென்மாவட்டங்களில் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்கின்றது,

நெல்லை மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவது வழக்கம், எனவே உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் என குளிக்க தனித்தனியாக தடுப்புச்சுவர், பெண்கள் உடை மாற்றும் அறை ஆகியவை உள்ளன. எனவே மணிமுத்தாறு அருவியில் ஏராளமான மக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.தமிழ்நாட்டில் தற்போது விடுமுறை காலமாக இருப்பதாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் பொதுமக்கள் நீர் நிலைகளான ஆறு, அருவி, அணைக்கட்டு, கடற்கரை போன்ற இடங்களைத் தேடி செல்கின்றனர்,

இதன் ஒரு பகுதியாக நேற்றும், நேற்று முன்தினமும் முன் எப்போதும் இல்லாத வழக்கத்தை விட அதிகமாக காலையிலேயே கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வந்தனர், மேலும் நேற்று அருகிலுள்ள பாபநாசம் உலகாம்பிகை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் அங்குள்ள அகத்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது, இதனால் கடந்த இரு தினங்களாக மணிமுத்தாறு சோதனை சாவடியில் இருந்து அருவி வரை வாகனங்கள் வரிசையாக இரு புறமும் சென்று வந்ததால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

மணிமுத்தாறு அருவிக்கு செல்ல கார், வேன் வாகனத்திற்கு ரூ.50ம், பெரியவர்கள் நபர் ஒன்றுக்கு ரூ.40ம், 5 வயது முதல் 12வயதிற்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.30ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருவதால் வனத்துறைக்கு கணிசமான வருமானம் வருகிறது, எனவே சுற்றுலா மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் மேலும் அடிப்படை வசதிகள் செய்து தரம் உயர்த்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஆட்டோ, மோட்டார் பைக்குகளில் செல்ல வனத்துறை அனுமதிக்காததால் அருகில் உள்ள கல்லிடை, அம்பை, மணிமுத்தாறு மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை நடுத்தர மக்கள் காரில் செல்ல வசதியில்லாமலும், அரசு பஸ்கள் அருவிக்கு இயக்கப்படாததாலும் அருகிலுள்ள இந்த அருவியில் தங்கள் குழந்தைகளை கூட்டி வந்து குளிக்க முடியாததால் மிகவும் வேதனை அடைகின்றனர். எனவே தகுந்த நிபந்தனைகளுடன் ஆட்டோ, பைக்குகளில் செல்ல அனுமதிக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொள்ள பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.65 அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் கணிசமாக இருப்பதால் படகு சவாரி பயணம் செய்து தரவும், மணிமுத்தாறு அணைக்கு அருகில் பராமரிப்பின்றி முட்புதராக கிடக்கும் பூங்காவை புனரமைப்பு செய்து சிறந்த சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்தவும் உள்ளூர் வியாபாரிகளும், சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் விரும்புகின்றனர்.

The post கொளுத்தும் கோடை வெயில்: மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article