கொலு பொம்மைகள் பராமரிப்பது எப்படி?

1 month ago 8

நவராத்திரி விழா, கொலு பொம்மைகள் என இப்போது வீடு கொஞ்சம் பெரிதாக இருந்தாலே கொலு வைக்கலாம் என்கிற விருப்பம் பலரிடம் அதிகரித்து வருகிறது. மேலும் பெருகிவிட்ட இணைய கலாச்சாரமும் இதற்கு ஒரு காரணம். எனினும் பல வருடங்களாக, பாரம்பரியமாக கொலு வைத்திருப்பவர்களுக்கு பொம்மைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும், எந்தெந்த பொம்மைகளை எப்படி மீண்டும் பத்திரப் படுத்த வேண்டும் என்பது நன்கு தெரியும். ஆனால் புது கொலு வைத்திருக்கும் மக்கள் கொலு முடிந்தபின் கொலு பொம்மைகள் பராமரிப்பு குறித்த டிப்ஸ்கள் இதோ.

*பொம்மைகளை வாங்கும் போதே விற்பனையாளர்களிடம் பொம்மையின் விபரங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். மண்ணால் செய்யப்பட்டதா, பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் அல்லது காகித பொம்மைகளா எனக் கேட்டு வாங்குங்கள். ஏனேனில் ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு விதமான பாதுகாப்பு முறைகள் உள்ளன.
*பொம்மைகளை பாலித்தீன் கவர் சுற்றி வைப்பதைத் தவிர்க்கவும். இதனால் நிறம் மங்கிவிடும். காகிதம் மற்றும் துணி கொண்டு சுற்றி வைக்கலாம்.
*காகிதம் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பொம்மைகளை ஈரமில்லாத உலர்ந்த பகுதிகளில் வைக்க வேண்டும். ஏனேனில் ஈரக்காற்றுப் பட்டாலே சீக்கிரம் ஊறி பொம்மை வீணாகிவிடும்.
*வருடத்திற்கு ஒருமுறை கொலு வரும்போதுதான் என்றில்லாமல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பொம்மைகளை எடுத்து துணியால் துடைத்து மீண்டும் அடுக்கி வைக்க நீண்ட நாட்கள் பொம்மைகள் அப்படியே இருக்கும்.
*மண் பொம்மைகளை மண்ணெண்ணெய் கொண்டு துணியால் துடைத்து வைக்க பளிச்சென இருக்கும். மேலும் கரையான், பூச்சிகள் அண்டாது.
*இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மெழுகுப் பூச்சு கொடுத்து பொம்மைகளை பெட்டிக்குள் வைக்க நிறம் மங்காமல் நீண்ட நாட்கள் இருக்கும். மேலும் மண் பொம்மைகளில் விரிசல் ஏற்படாமல் மேற்பூச்சாகவும் செயல்படும்.
*புதிய பொம்மைகளை எப்போது முதல் படியில் வைத்திருந்து புது பொம்மைகளை தனி பெட்டியில் வைக்க, பழையனவற்றால் புதியவை சேதாரம் ஆகாமல் தவிர்க்கப்படும்.
*ஒவ்வொரு செட் பொம்மைகளையும் தனித்தனியாக அடுக்கி, எந்தெந்த பெட்டிகளில் என்னென்ன பொம்மைகள் உள்ளன என எழுதி அட்டைப் பெட்டியில் ஒட்டி வைத்தால் மீண்டும் எடுக்கும் போது தேட வேண்டிய அவசியம் இருக்காது.
*கொலுவுடன் சிலர் பிளாஸ்டிக் பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், கிராமம், நகரம், இரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பல அமைப்புகள் செய்வதுண்டு. அவற்றை கொலு பொம்மைகளுடன் அடுக்காமல் தனியாக அடுக்குவது நல்லது.
*ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையேனும் பழைய பொம்மைகளில் எவை நல்ல நிலையில் உள்ளன, எதற்கு மீண்டும் வண்ணம் பூச வேண்டும் உள்ளிட கவனிப்பு அவசியம்.
*ஒருசிலர் கடைகளில் மொத்தமாக வண்ணம் பூசக் கொடுப்பது வழக்கம். சிலர் வீட்டிலேயே வண்ணம் பூசுவர். அப்படியான வண்ணப் பூச்சுகள் பூசும்போது உடன் வார்னிஷ் கலந்து பூசினால் பளபளப்பாகவும், கலர் மங்காமலும் நீடித்து உழைக்கும்.
*கண்ணாடி அல்லது பீங்கான் பொம்மைகளை தனிப் பெட்டியில் வைத்து பரணியில் ஏற்றாமல், கீழேயே வைப்பது பொம்மைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். காரணம் பரண்களில் ஏற்றினால் மற்ற பொருட்கள் எடுக்கும் போது தவறாக இந்தப் பெட்டியை நகர்த்தி, உராய்ந்து என சேதம் உண்டாக்க நேரிடும்.
– கவின்

The post கொலு பொம்மைகள் பராமரிப்பது எப்படி? appeared first on Dinakaran.

Read Entire Article