கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

1 month ago 9

ஊட்டி: கனமழை காரணமாக குன்னூரில் மண் சரிவில் சிக்கி தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர், 2 மகள்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஊட்டி, குன்னூர், குந்தா மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் மழையின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் துவங்கி இடி, மின்னலுடன் பல மணி நேரம் பலத்த இடியுடன் கூடிய மழை கொட்டியது. கன மழையின்போது குன்னூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள ரேலி காம்பவுண்ட் பகுதியில் திடீரென நடைபாதையில் மண் சரிவு ஏற்பட்டது.

இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த தனியார் பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி (42) மண் சரிவில் சிக்கிக்கொண்டார். அவரது கணவர் ரவி, மகள்கள் வர்ஷா, ஆயூ ஆகியோர் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டனர். இது குறித்து குன்னூர் தீயணைப்புத் துறையிருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து வீட்டில் சிக்கிய 3 பேரையும் மீட்டனர். மண்ணில் சிக்கிய ஜெயலட்சுமியை மீட்க ஒரு மணி மணி நேரம் ஆனது. அவரை மீட்டு தீயணைப்புத்துறையினர் உடனடியாக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மண் சரிவில் சிக்கி தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பாறை விழுந்ததால் மலை ரயில் ரத்து: கனமழை காரணமாக கல்லாறு-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மண் சரிந்து விழுந்தது. மேலும் பாறாங்கற்களும் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனால் நேற்று காலை 7.10 மணியளவில் 184 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. ஆர்வத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் பேருந்துகள் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர். இன்றும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Read Entire Article