*சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் செயல்படாமல் உள்ள நடன நீரூற்றை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடங்களில் முக்கியமான இடமாக உள்ளது பிரையண்ட் பூங்கா. இந்த பூங்காவில் கண்ணை கவரும் வண்ண மலர்கள், இளைப்பாறும் புல்வெளி, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
இந்த வரிசையில் பூங்கா அலுவலகம் அருகேயுள்ள நீர்த்தேக்கம் சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் உள்ளது. இதற்கு காரணம் இதில் அமைக்கப்பட்டுள்ள நடன நீரூற்று தான். கோடை சீசன் காலங்களில் அவ்வப்போது செயல்படுத்தப்படும் இந்த நடன நீரூற்று தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு வெறும் காட்சி பொருளாக உள்ளது. மேலும் இந்த நீர்த்தேக்கமும் மாசு அடைந்து நீர் தாவரங்கள் மறைத்து உள்ளன.
இதனால் பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் நடன நீரூற்றின் அழகை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீர்த்தேக்கத்தை தூய்மை செய்து செயல்படாமல் இருக்கும் நடன நீரூற்றை வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடன நீரூற்று மீண்டும் இயக்கப்படுமா? appeared first on Dinakaran.