திண்டுக்கல்,
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் வாகனங்களுக்கு கடந்த 7.5.2024 முதல் இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கிறது. மேலும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் எளிதாக இ-பாஸ் பெறுவதற்கு வசதியாக கியூ.ஆர்.கோடு வசதி உள்ளது.
இந்த இ-பாஸ் ஸ்கேனிங் மூலம் சோதனை செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதற்காக கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு இ-பாஸ் சோதனை செய்யப்படுவதால் போக்குவரத்து நெரிசல், சிலநேரம் இணையதள பிரச்சினையால் இ-பாஸ் பெறுதல், ஸ்கேன் செய்வதில் கூடுதல் நேரம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி மட்டுமின்றி காமக்காபட்டி போலீஸ் சோதனைச்சாவடி, தருமத்துப்பட்டி, வடகாடு சித்தரேவு ஆகிய வனத்துறை சோதனைச்சாவடிகள், பாலசமுத்திரம், அய்யம்புள்ளி போலீஸ் சோதனைச்சாவடிகளிலும் இ-பாஸ் ஸ்கேனிங் மூலம் சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்கும்படி கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார்.
இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து 7 இடங்களிலும் நேற்று இ-பாஸ் ஸ்கேனிங் செய்யப்பட்டு கொடைக்கானலுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களும் தடை செய்யப்பட்டு இருக்கின்றன. இங்கு இ-பாஸ் ஸ்கேனிங் செய்யப்படுவதோடு, பிளாஸ்டிக் பாட்டில் சோதனையும் நடத்தப்படுகிறது. இதன்மூலம் வாகனங்கள் காத்திருப்பது, போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது.