
கொடைக்கானல்,
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர்.
தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் அனைவரையும் கட்டிப்போட்டுள்ளது. அதிலும் தாங்கள் செல்லும் இடங்களை வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதில் பொதுமக்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்வதுடன், அவற்றை புகைப்படம், வீடியோ எடுத்து தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுகின்றனர்.
இந்தநிலையில் சமீப காலமாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் மலைப்பாதையிலும், நகரின் முக்கிய சாலைகளில் செல்லும்போதும் வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். அதாவது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் மேற்கூரை மற்றும் ஜன்னல் பகுதியில் அமர்ந்தபடி பயணம் செய்வதுடன், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக அதனை வீடியோ எடுத்து வருகின்றனர்.
'ரீல்ஸ்' மோகத்தில் சுற்றுலா பயணிகள் செய்யும் இதுபோன்ற செயலால் பிற சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர் செல்லும் மலைப்பாதையில் இளைஞர்கள் சிலர் சொகுசு காரில் சென்றனர். அப்போது அவர்களில் 3 பேர் திடீரென காரின் இருபக்கமுள்ள ஜன்னல்களில் அமர்ந்தபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததுடன், அதனை 'ரீல்ஸ்' வீடியோ எடுத்தனர்.
இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் சென்றனர். மேலும் இளைஞர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து இளைஞர்கள் சென்ற வாகன பதிவெண்ணை வைத்து 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் இதுபோன்று ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மீதும், 'ரீல்ஸ்' மோகத்திற்காக ஆபத்தான முறையில் பயணம் செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.