*சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கோபி : கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் நேற்றும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையாகும்.
சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இங்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்தனர்.
அருவி போல் கொட்டும் தண்ணீரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பல மணி நேரம் நின்று குளித்தும் அருகில் உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடுவதற்காக வந்த சுற்றுலா பயணிகள், அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், ஆங்காங்கே கொட்டிய குறைந்த தண்ணீரில் குளித்தும், பூங்காவில் விளையாடியும் சென்றனர்.
அதேபோன்று குடும்பம் குடும்பமாக அணையின் மேல் பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்டு விடுமுறையை மகிழ்ச்சியாக களித்தனர். நேற்று வருகை தந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் ஏமாற்றத்துடன் சென்றனர்.
The post கொடிவேரியில் தண்ணீர் நிறுத்தம் appeared first on Dinakaran.